‘ஏஐ’க்கான தண்ணீர்ப் பயன்பாடு குறித்துப் புதிய ஆய்வு

‘ஏஐ’க்கான தண்ணீர்ப் பயன்பாடு குறித்துப் புதிய ஆய்வு

படம்: நியூயார்க் டைம்ஸ்

25 Nov 2026 - 11:57 am

1 mins read

நியூயார்க்: பாதாம் பால் அல்லது கோல்ஃப் விளையாட்டிற்காகச் செலவிடப்படும் ஒரு டாலரைவிட செயற்கை நுண்ணறிவு (ஏஐ) குறைந்த அளவே தண்ணீரைப் பயன்படுத்துவதாக ‘என்வெரஸ் இன்டலிஜென்ஸ் ரிசர்ச்’ நிறுவனத்தின் புதிய ஆய்வு தெரிவிக்கிறது.

மாதந்தோறும் ஏஐ பயன்பாட்டிற்காக 25 அமெரிக்க டாலர் (S$32) செலவிடும்போது ஏறத்தாழ 1.9 கேலன் தண்ணீர் (ஏழு லிட்டர்) பயன்படுத்தப்படுகிறது. தரவு நிலையங்களுக்கான மின்சார உற்பத்திக்குப் பயன்படும் தண்ணீரும் இதில் அடங்கும்.

அதே தொகையை பாதாம் பாலுக்குச் செலவிட்டால் 308 கேலன் தண்ணீரும் (1,166 லிட்டர்), கோல்ஃப் திடல் கட்டணத்திற்குச் செலவிட்டால் 679 கேலன் தண்ணீரும் (2,570 லிட்டர்) செலவாகிறது.

சீரான மாதாந்தரச் செலவு அளவுகோலைப் பயன்படுத்தி தண்ணீர்ப் பயன்பாட்டை என்வெரஸ் அறிக்கை ஒப்பிடுகிறது.

“தண்ணீர்ப் பயன்பாடு குறித்து அக்கறை கொண்ட சராசரிப் பயனீட்டாளர், ஏஐ செயலிகளை முற்றிலும் தவிர்ப்பதைவிட வாரத்திற்கு ஒரு பாதாம் லாட்டே பானத்தைத் தவிர்ப்பது அதிகப் பலனளிக்கும்,” என்று என்வெரஸ் நிறுவனத்தின் ஆய்வு இயக்குநர் ரயான் லூதர் கூறினார்.

ஏஐ மாதிரிகளை இயக்குவதற்குச் செலவாகும் தண்ணீரில் ஏறத்தாழ 90 விழுக்காடு மின்னுற்பத்தி நிலையங்களில் பயன்படுத்தப்படுகிறது.

நவீனப் பெருந்தரவு நிலைய வளாகம் ஏக்கருக்கு மாதம் ஏறத்தாழ 32,100 கேலன் தண்ணீரைப் பயன்படுத்துகிறது. இது பாதாம், நெல் சாகுபடியைவிடக் குறைவு என அவர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்