கனடாவின் புதிய விசா விதிமுறை; இந்திய நாட்டவரைப் பாதிக்கலாம்

2 mins read
ff1acfb7-c65d-4264-bc04-dbfbcd209411
கனடாவின் புதிய விசா விதிமுறைகள் ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள், ஊழியர்கள், சுற்றுலாப் பயணிகளை பாதிக்கலாம். குறிப்பிட்ட நிபந்தனைகளின் கீழ் படிப்பு, பணி அனுமதிகளை ரத்து செய்ய அதிகாரிகளுக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. - படம்: இணையம்

கனடாவில் வெளிநாட்டினர் குடியேற்றத்தைக் கட்டுப்படுத்த விசா விதிமுறைகளை அந்நாடு மாற்றியுள்ளது.

புதிய விதிமுறைகள் படிக்கவும் வேலை செய்யவும் குடியேறவும் கனடா செல்லும் ஆயிரக்கணக்கானோரைப் பாதிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கனடாவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள், ஊழியர்கள், புலம்பெயர்ந்தவர்களின் விசா தகுதியை எந்த நேரத்திலும் மாற்றுவதற்கான அதிகாரம் கனடா எல்லைப் படை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

குடிநுழைவு, அகதிகள் பாதுகாப்பு விதிமுறைகளில் செய்யப்பட்டுள்ள திருத்தங்களின்படி, மின்னணு விசா, தற்காலிக தங்கும் விசா உள்ளிட்டவற்றை மறுக்கவோ, நிராகரிக்கவோ கனடா எல்லைப் படைக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கனடாவில் உள்ள வெளிநாட்டவர் தங்களது விசா காலம் நிறைவடைந்த பிறகும் அவர் நாட்டைவிட்டு வெளியேற மாட்டார் என்று கனடா அதிகாரி நினைத்தால், அவரது விசா காலம் முடிவதற்கு முன்னரே விசாவை ரத்து செய்யவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டினருக்கு, குறிப்பாக இந்தியர்களுக்கு நிச்சயமற்ற தன்மை

புதிய விதிமுறைகள் ஆயிரக்கணக்கான அனைத்துலக மாணவர்கள், ஊழியர்களுக்கு நிச்சயமற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது.

இரு பிரிவுகளிலும் இந்திய நாட்டினர் மிகப்பெரிய அளவில் உள்ளனர். இந்திய மாணவர்கள் அதிகம் விரும்பும் இடங்களில் ஒன்றாக கனடா உள்ளது. தரவுகளின்படி, தற்போது கனடாவில் உயர்கல்வி படித்து வரும் இந்திய மாணவர்கள் எண்ணிக்கை 4.2 லட்சத்துக்கும் அதிகம்.

தற்காலிக தங்கும் விசாவை பெற்று இந்தியாவைச் சேர்ந்த பலரும் கனடாவுக்கு சுற்றுலா செல்கிறார்கள். 2024 முதல் பாதியில் மட்டும் 3.6 லட்சம் இந்தியர்களுக்கு பயண விசா வழங்கப்பட்டுள்ளது.

மாணவர்கள், சட்டபூர்வக் குடியேறிகளின் விசாக்கள் ரத்து செய்யப்பட்டால், அவர்கள் குறிப்பிட்ட காலத்துக்குள் கனடாவைவிட்டு வெளியேற ஆணை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே காலிஸ்தான் விவகாரத்தில் இந்தியா - கனடா இடையே பிரச்சினை நிலவி வரும் சூழலில், புதிய விசா விதிமுறைகளால் பாதிப்பு ஏற்படக்கூடும் என்ற அச்சம் இந்தியர்களிடையே நிலவுகிறது.

குறிப்புச் சொற்கள்