நியூயார்க்: இவ்வாண்டு முதல் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் தீபாவளித் திருநாளன்று பள்ளிகள் திறக்கப்படாது.
தீபாவளிக்குப் பள்ளி விடுமுறை விடப்படவுள்ளதே இதற்குக் காரணம். அந்நகர மேயர் எரிக் ஆடம்ஸ் அதிகாரபூர்வமாகத் திங்கட்கிழமையன்று இதனை அறிவித்தார்.
இருளகற்றி ஒளிநிறைக்கும் தீபாவளித் திருநாளை நியூயார்க்கில் பல்லாயிரக்கணக்கானோர் கொண்டாடுகின்றனர்.
இந்நிலையில், தீபாவளி விடுமுறை அறிவிப்பானது உள்ளூர்க் குடும்பங்களுக்குக் கிடைத்த குறிப்பிடத்தக்க வெற்றி என்று மேயர் ஆடம்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
“தீபாவளியன்று பள்ளிகளுக்கு விடுமுறை பெற்றுத் தருவதில் நியூயார்க் மாநில சட்டமன்ற உறுப்பினர் ஜெனிஃபர் ராஜ்குமாரும் சமூகத் தலைவர்களும் உறுதியுடன் போராடியதை எண்ணிப் பெருமைப்படுகிறேன். முன்னதாகவே என்றாலும் இப்போதே கூறிவிடுகிறேன்: தீபாவளி வாழ்த்துகள்,” என்று அவர் தமது டுவிட்டர் பதிவில் கூறியுள்ளார்.
அம்மசோதாவிற்கு ஆளுநர் கேத்தி ஹோச்சுல் ஒப்புதல் அளிப்பார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும், “ஒருவர் எங்கிருந்து வேண்டுமானாலும் வந்திருக்கலாம், ஆயினும், நியூயார்க் எல்லாருக்குமான நகரம்,” என்றும் திரு ஆடம்ஸ் தெரிவித்துள்ளார்.
இப்போதைக்குப் பள்ளி அட்டவணையின் விடுமுறை நாள்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள ‘புரூக்ளின் - குவீன்ஸ் நாளுக்கு’ பதிலாக தீபாவளி சேர்க்கப்படும்.
இவ்வாண்டு நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்படவுள்ளது. ஆனால், அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அடுத்த ஆண்டுதான் தீபாவளிக்கு முதன்முறையாகப் பள்ளிகள் மூடப்படும்.


