நியூயார்க்: தோழர்களாகச் செயல்படும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பேசுசெயலிகளைச் சிறார்கள் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையிலான புதிய சட்டத்தில், நியூயார்க் ஆளுநர் புதன்கிழமை (அக்டோபர் 28) கையெழுத்திட்டுள்ளார்.
பயனீட்டாளர்களை நேரடியாகச் சென்றடையும் ஏஐ மாதிரிகளுக்குக் கட்டுப்பாடுகளை விதிக்கும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ள விரிவான நடவடிக்கைகளில் ஒன்றாக அது கருதப்படுகிறது.
அப்புதிய சட்டத்தின்கீழ், ‘ஓப்பன்ஏஐ’யின் ‘சாட்ஜிபிடி’ போன்ற பேசுசெயலி நிறுவனங்கள் தங்களது பயனர்களின் வயதை உறுதிப்படுத்துவதைக் கட்டாயமாக்குகிறது. அதோடு, ஒரு பயனர் 18 வயதுக்குக் கீழ் இருந்தால், ஏஐ கட்டமைப்பில் உள்ள குறிப்பிட்ட சில அம்சங்களின் பயன்பாடும் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.
குறைந்த வயதுடையவர்கள் பயன்படுத்தும்போது, அந்தப் பேசுசெயலி தான் ஒரு மனிதர், உயிருடன் இருப்பவர் அல்லது மனித உணர்வுகளை அனுபவிக்கக்கூடியவர் என்று பயனர்களை நம்பவைக்கும் எந்தவோர் உள்ளடக்கத்தையும் உருவாக்கக்கூடாது என அச்சட்டம் குறிப்பிடுகிறது.
‘”இனி குழந்தைகள் தங்களின் நண்பர்களாகவோ காதலர்களாகவோ காதலிகளாகவோ செயல்படும் பேசுசெயலிகளைப் பயன்படுத்த முடியாது,” என்று நியூயார்க் ஆளுநர் கேத்தி ஹோச்சுல் தெரிவித்தார்.
கலிஃபோர்னியா உள்ளிட்ட பிற அமெரிக்க மாநிலங்களும் பேசுசெயலிகளுக்குக் கட்டுப்பாடுகளை விதிக்கும் சட்டங்களை ஏற்கெனவே நிறைவேற்றியுள்ளன.
