வெளிநாட்டு மாணவர் சந்தை மதிப்பை இருமடங்காக்க நியூசிலாந்து எண்ணம்

1 mins read
67ca1951-5382-4eaf-88ce-00f9da678c00
நியூசிலாந்தின் ஆக்லாந்து பல்கலைக்கழகம். - படம்: tripideas.nz / இணையம்

வெல்லிங்டன்: தங்கள் வெளிநாட்டு மாணவர் சந்தை மதிப்பை இருமடங்காக்குவதற்கான திட்டத்தை நியூசிலாந்து அரசாங்கம் திங்கட்கிழமை (ஜூலை 14) வெளியிட்டது.

அச்சந்தையின் மதிப்பை 2034ஆம் ஆண்டுக்குள் 7.2 பில்லியன் நியூசிலாந்து டாலருக்கு (5.5 பில்லியன் வெள்ளி) அதிகரிக்கச் செய்ய நியூசிலாந்து திட்டமிட்டுள்ளது. வெளிநாடுகளிலிருந்து வரும் மாணவர்கள் படித்துக்கொண்டே பகுதிநேர வேலை பார்க்க வசதியாக சட்டங்களைத் தளர்த்துவது, இது தொடர்பான நடவடிக்கைகளில் அடங்கும்.

கடந்த 2023ஆம் ஆண்டிலிருந்து நியூசிலாந்து கல்வி நிலையங்களில் சேரும் அனைத்துலக மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அச்சந்தை காணும் வளர்ச்சியைப் பன்மடங்கு உயர்த்த அரகாங்கம் எண்ணம் கொண்டுள்ளதாக அந்நாட்டின் கல்வி அமைச்சர் எரிக்கா ஸ்டேன்ஃபர்ட் கூறினார்.

நியூசிலாந்தின் வெளிநாட்டு மாணவர் சந்தையின் தற்போதைய மதிப்பு 3.6 பில்லியன் நியூசிலாந்து டாலர். அடுத்த 10 ஆண்டுகளில் அந்த மதிப்பை இரட்டிப்பாக்குவதுடன் அனைத்துலக மாணவர் சேர்க்கையை 2027ல் 105,000க்கும் 2034க்குள் 119,000க்கும் உயர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது. 2024ல் அந்த எண்ணிக்கை 83,700ஆக இருந்தது.

ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் வெளிநாட்டு மாணவர் சேர்க்கையைக் குறைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றன. இவ்வேளையில், நியூசிலாந்தின் மாறுபட்ட அணுகுமுறை இடம்பெறுகிறது.

குறிப்புச் சொற்கள்