நியூசிலாந்து: தேர்தலில் முன்கூட்டியே வாக்களித்தோர் விகிதம் அதிகரிப்பு

நியூசிலாந்து: தேர்தலில் முன்கூட்டியே வாக்களித்தோர் விகிதம் அதிகரிப்பு

படம்: ராய்ட்டர்ஸ்

02 Nov 2026 - 4:09 pm

2 mins read

வெலிங்டன்: நியூசிலாந்துப் பொதுத் தேர்தலில் முன்கூட்டியே வாக்களிக்கும் நடைமுறையின் முதல் வாரத்தில் கிட்டத்தட்ட 1 மில்லியன் வாக்குகள் பதிவாகியுள்ளன.

தேர்தல் ஆணையம் திங்கட்கிழமை (நவம்பர் 2) அத்தகவலை வெளியிட்டது.

அக்டோபர் 26ஆம் தேதிக்கும் நவம்பர் முதல் தேதிக்கும் இடைப்பட்ட ஏழு நாள்களில் மொத்தம் 913,762 வாக்குகள் பதிவாகியிருந்ததாகத் தேர்தல் ஆணையம் கூறியது.

இந்த எண்ணிக்கை 2023ஆம் ஆண்டுப் பொதுத்தேர்தலின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 28 விழுக்காடு அதிகம் என்று தெரிவிக்கப்பட்டது.

முதல் வாரத்தில் சனிக்கிழமை ஆக அதிகப் பரபரப்பான வாக்குப்பதிவு நாளாக அமைந்தது. அன்றைய நாளில் மட்டும் 190,000க்கும் மேற்பட்ட வாக்குகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுப் பதிவுசெய்யப்பட்டதாக ஆணையம் குறிப்பிட்டது.

“வாக்களிப்பு மிகவும் நல்லதொரு தொடக்கத்தைக் கண்டுள்ளது. வாக்காளர்கள், அவர்களின் வாக்குகளைப் பதிவு செய்வதற்கு இன்னும் ஆறு நாள்கள் எஞ்சியுள்ளன,” என்று தலைமைத் தேர்தல் அதிகாரி கார்ல் லே குவெஸ்னே தெரிவித்தார்.

இவ்வாரத்தில் பொதுமக்களுக்காக நாள்தோறும் ஏறக்குறைய 600 வாக்களிப்பு நிலையங்கள் செயல்படும்.

பொதுத் தேர்தல் நவம்பர் 7ஆம் தேதி நடைபெறவுள்ளது. அன்று வாக்களிப்பு நிலையங்களின் மொத்த எண்ணிக்கை 2,300க்கும் அதிகமாக உயரும் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

தேர்தல் நடைபெறுவதற்கு 13 நாள்களுக்கு முன்னதாகவே வாக்காளர் பதிவுப் பணிகளை முடிவுக்குக் கொண்டுவரும் சர்ச்சைக்குரிய புதிய விதிமுறைகளை அந்நாட்டு அரசாங்கம் கொண்டுவந்தது.

அவ்வாறு காலக்கெடுவை முன்கூட்டியே முடிவுக்குக் கொண்டுவருவது வாக்களிக்க நினைப்போரின் பங்களிப்பைத் தடுத்துவிடும் என்று விமர்சகர்கள் பலர் வாதாடினர். ஆனால், அரசாங்கத்தின் அந்த விமர்சனங்களையும் மீறி முன்கூட்டியே நடைபெறும் வாக்குப்பதிவில் ஏராளமானோர் பங்கெடுத்துள்ளனர்.

இதனிடையே, மிகக் கடுமையான போட்டி நிலவும் இத்தேர்தலில் எந்தவொரு தனிக் கட்சிக்கோ கூட்டணிக் கட்சிகளின் குழுவிற்கோ தெளிவான வெற்றி வாய்ப்பு இன்னமும் இல்லை என்பதை ஆகப் புதிய கருத்துக் கணிப்புகள் தெளிவாகக் காட்டுகின்றன.

குறிப்புச் சொற்கள்