நைஜீரியா துப்பாக்கிச்சூடு: 11 பேர் பலி, 13 பேர் பிணைபிடிப்பு

நைஜீரியா துப்பாக்கிச்சூடு: 11 பேர் பலி, 13 பேர் பிணைபிடிப்பு

சித்திரிப்பு: பிக்சாபே

09 Nov 2026 - 8:08 pm

1 mins read

கனோ: வடமேற்கு நைஜீரியாவின் ஸம்ஃபாரா மாநிலத்தில் உள்ள கிராமம் ஒன்றில், ஆயுதமேந்திய கும்பல் ஒன்று சென்ற வார இறுதியில் நடத்திய கொடூரத் தாக்குதலில் உள்ளூர்ப் பாதுகாப்புத் தொண்டூழியரும் அவரது குடும்பத்தினர் 10 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

தாக்குதல்காரர்கள் மாண்டோரின் உடல்களை எரித்து, வீட்டையும் தீயிட்டுக் கொளுத்தினர். மேலும் 13 பேரை அவர்கள் கடத்திச் சென்றதாகக் காவல்துறை திங்கட்கிழமை (நவம்பர் 9) தெரிவித்தது.

மராடுன் மாவட்டத்தின் கிடான் டாபா பகுதியில் குற்றக் கும்பல்களின் ஊடுருவல்களைத் தடுத்து, பாதுகாப்புப் படையினருக்குத் தொடர்ந்து உதவி வந்ததால் அந்தத் தொண்டூழியர் தாக்கப்பட்டதாகக் காவல்துறைப் பேச்சாளர் யாசித் அபூபக்கர் கூறினார்.

அரசாங்க ஆதரவுபெற்ற பாதுகாப்புக் குழுவின் உறுப்பினரான அந்தத் தொண்டூழியர் தங்கள் குற்ற நடவடிக்கைகளுக்குப் பெரிய தடையாக இருப்பதாக அக்கும்பல் கருதியது என்று அவர் தெரிவித்தார்.

கடத்தப்பட்ட பிணைக்கைதிகளைப் பாதுகாப்பாக மீட்கும் நோக்கில், அப்பகுதியில் கூடுதல் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுத் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இஸ்லாமியத் தீவிரவாதிகளுடனும் ஆயுதமேந்திய கொள்ளைக் கும்பல்களுடனும் பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து கடுமையாகப் போராடி வருகின்றனர். இதனால் தங்களது கிராமங்களையும் நகரங்களையும் பாதுகாக்கப் பல வடமேற்கு மாநிலங்களில் உள்ளூர் மக்கள் தன்னார்வக் குழுக்களை அமைத்துள்ளனர்.

குற்றக்கும்பல்கள் பல ஆண்டுகளாகக் கிராமங்களைச் சூறையாடி, வீடுகளைக் கொள்ளையடித்து, பிணைப்பணத்திற்காக மக்களைக் கடத்தி வருவதாகத் தகவல்கள் கூறுகின்றன.

குறிப்புச் சொற்கள்