ஜோகூர் வனவிலங்குப் பூங்காவில் இவ்வாண்டு இறுதியில் இருந்து விலங்குகளின் இரவுநேரக் காட்சி இடம்பெறும் என்று அம்மாநில நகராட்சி உறுப்பினர் முகமது ஜாஃப்னி ஷுக்கோர் தெரிவித்துள்ளார்.
அந்த வனவிலங்குப் பூங்காவின் இரண்டாம் கட்ட மேம்பாட்டுப் பணிகளுக்கு மாநில முதல்வர் ஓன் பின் ஹஃபிஸ் காஸி ஒப்புதல் தந்துள்ளதாக ஜோகூர் வீட்டு வசதி, உள்ளூர் ஆட்சி மன்றத் தலைவர் கூறினார். அந்த மேம்பாட்டுப் பணிகள் 5 மில்லியன் மலேசிய ரிங்கிட்டுக்கு (S$1.52மி.) மேற்கொள்ளப்படும் என்றும் அவை இவ்வாண்டின் முதல் காலாண்டில் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
“அண்மையில் நாங்கள் வாகன நிறுத்துமிட வசதி, விலங்குக் கூண்டுகள் தொடர்பாக மேம்பாடுகள் மேற்கொள்ளும்படி பரிந்துரை செய்திருந்தோம். அவற்றுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
“இந்த மேம்பாட்டுப் பணிகள் நிறைவுபெற்றதும் வனவிலங்குப் பூங்காவின் 80 விழுக்காடு இடங்கள் முதியோர், உடற்குறையுள்ளோர், தள்ளுவண்டிகளில் குழந்தைகளுடன் வருவோர் ஆகியோர் பூங்காவைக் கண்டு களிக்கும் வாய்ப்பு ஏற்படும்.
“மேலும் வனவிலங்குப் பூங்காவின் இரவுநேரக் காட்சியை இவ்வாண்டு நான்காம் காலாண்டில் அனைவரும் காணலாம்,” என்று திரு முகமது ஜாஃப்னி ஷுக்கோர் விளக்கினார்.
வனவிலங்குப் பூங்காவைக் காண வருவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில் பூங்காவுக்கு எதிரில், ஜாலான் கெர்டாக் மேரா என்ற இடத்தில் உள்ள நிலப்பரப்பை கார் நிறுத்துமிடமாக அமைக்கவுள்ளது. இதற்காக, ஜோகூர் பாரு நகர மன்றம் 10 மில்லியன் ரிங்கிட் செலவிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“அங்குள்ள சாலை சற்று வளைவாக உள்ளது. அது நேராக்கப்பட்டு புதிய கார் நிறுத்த வசதி அமைக்கப்படும்,” என்று அவர் விளக்கினார்.
அத்துடன், தனியார் வசம் உள்ள சுல்தான் அபு பக்கர் பள்ளிவாசலுக்கு எதிரில் உள்ள கார் நிறுத்துமிடத்தையும் பயன்படுத்த பரிசீலிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.