பேங்காக்: இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் ஐந்து பேரை நிபா கிருமி தொற்றியதாக வெளிவந்த செய்தியைத் தொடர்ந்து தாய்லாந்து விழிப்புநிலையை அறிவித்துள்ளது.
இந்தியாவில் இருந்து வரும் பயணிகளைப் பரிசோதிப்பதற்கான ஏற்பாடுகளை தாய்லாந்து பொதுச் சுகாதார அமைச்சு தொடங்கி உள்ளது.
பேங்காக் அனைத்துலக விமான நிலையத்தில் நிபா கிருமித்தொற்றுப் பரிசோதனைக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து வரும் பயணிகள் அனைவரும் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 25) முதல் பரிசோதிக்கப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக, மேற்கு வங்காள மாநிலப் பயணிகளிடம் தீவிர பரிசோதனை நடத்தப்படுவதாக ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.
இந்தியாவின் கிழக்கு மாநிலமான மேற்கு வங்காளத்தில் நிபா கிருமிப் பரவல் காரணமாக ஐவர் பாதிக்கப்பட்டதாகவும் கிட்டத்தட்ட நூறு பேர் தனிமைப்படுத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாயின.
மேற்கு வங்காளத்தின் நாராயணா பலதுறை சிறப்பு மருத்துவமனையின் இரண்டு தாதியர்களுக்கு நிபா கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டதாக ஒரு வாரத்திற்கு முன்னர் டெலிகிராஃப் இணையச் செய்தி கூறியிருந்தது.
அவர்களில் ஒருவரின் உடல்நிலை மோசமாகி கோமா நிலைக்குச் சென்றதாகவும் அச்செய்தி குறிப்பிட்டிருந்தது.
காய்ச்சல், தலைவலி, உடல்வலி, தொண்டை வறட்சி, இருமல், மூச்சுவிடுவதில் சிரமம் போன்ற குறைபாடுகள் கண்டறியப்படுவோர் உடனடியாக மருத்துவக் கவனிப்புக்கு அனுப்பப்படுவார்கள் என்று தாய்லாந்து பொதுச் சுகாதார அமைச்சு கூறியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
குறிப்பாக, தாய்லாந்து வருவதற்கு 21 நாள்கள் முன்னதாக நோய்வாய்ப்பட்டவர்கள், நோயால் பாதிக்கப்பட்ட விலங்குகள் மற்றும் வௌவால்களுடன் தொடர்பில் இருந்த பயணிகள் தீவிரப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் அது தெரிவித்துள்ளது.
கொவிட்-19 போன்ற பரிசோதனை: பிரதமர் அனுடின்
இதற்கிடையே, இந்தியாவில் பரவும் நிபா கிருமித்தொற்று தாய்லாந்தைப் பாதிக்காதவாறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தாய்லாந்து பிரதமர் அனுடின் சார்ன்விராகுல் தெரிவித்துள்ளார்.
கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் மேற்கொள்ளப்பட்டதைப் போன்ற பரிசோதனைகளைத் தாய்லாந்து தீவிரப்படுத்தும் என்று குறிப்பிட்ட அவர், தற்போது வரை தாய்லாந்தில் நிபா கிருமித்தொற்றுச் சம்பவம் எதுவும் பதிவாகவில்லை என்றார.
பழம் தின்னி வௌவால்கள் மூலம் நிபா கிருமி மனிதர்களுக்குப் பரவுகிறது. காய்ச்சல், தலைவலி, மூச்சு விடுவதில் சிரமம் ஆகியவை கிருமித்தொற்றின் ஆரமபக்கட்ட அறிகுறிகள். நோய்த்தொற்று மோசமானால் மூளை அழற்சி ஏற்பட்டு உயிரிழக்கும் சாத்தியம் உள்ளது.
நிபா கிருமித்தொற்றுக்கு இதுவரை தடுப்பூசியோ அல்லது குறிப்பிட்ட சிகிச்சையோ இல்லை. அந்தக் கிருமித் தொற்றியோரில் உயிரிழக்கும் வாய்ப்பு 40 விழுக்காடு முதல் 75 விழுக்காடு வரை அதிகமாக உள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் ஏற்கெனவே தெரிவித்துள்ளது.

