மலேசியாவில் ஆந்த்ராக்ஸ் சம்பவங்கள் இல்லை

மலேசியாவில் ஆந்த்ராக்ஸ் சம்பவங்கள் இல்லை

1 mins read
79a31879-920c-40e3-b041-7419e246ba85
தாய்லாந்தில் ஆந்த்ராக்ஸ் கிருமித்தொற்றுக்கு ஆளான ஒருவர் உயிரிழந்தார். - கோப்புப் படம்: இபிஏ

புத்ராஜெயா: மலேசியாவில் இதுவரை புதிதாக ஆந்த்ராக்ஸ் தொற்றுச் சம்பவங்கள் ஏதும் பதிவாகவில்லை என்று மலாய் மெயில் ஊடகம் தெரிவித்துள்ளது.

விலங்குகளிலிருந்து மனிதர்களுக்குப் பரவக்கூடிய ஆந்த்ராக்ஸ் தொற்று, மலேசியாவில் கடைசியாக 1976ஆம் ஆண்டு பதிவானது. அதற்குப் பிறகு இதுவரை புதிய சம்பவங்கள் ஏதும் இடம்பெறவில்லை என்று அந்நாட்டின் விலங்கு மருத்துவச் சேவைகள் பிரிவு (டிவிஎஸ்) ஞாயிற்றுக்கிழமை (மே 11) அறிக்கை முலம் தெரிவித்தது.

தற்போது தாய்லாந்தில் ஏற்பட்டுள்ள ஆந்த்ராக்ஸ் பரவலைத் தாங்கள் மிகுந்த அக்கறையுடன் கருத்தில்கொள்வதாக டிவிஎஸ் குறிப்பிட்டது. இம்மாதம் ஒன்றாம் தேதி தாய்லந்தில் ஆந்த்ராக்ஸ் தொற்றுக்கு ஆளான ஒருவர் உயிரிழந்தார் என்று அந்நாட்டின் நோய்க் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்திருந்தது.

வடகிழக்கு தாய்லாந்தின் முக்டாஹான் மாநிலத்தில் உள்ள டோன் டான் மாவட்டத்தில் மாடுகள் கொல்லப்படுவது, சமைக்கப்படாத மாட்டிறைச்சியை உட்கொள்வது ஆகிய செயல்களுடன் அந்த கிருமித்தொற்றுச் சம்பவத்துக்குத் தொடர்பிருந்தது.

அப்பகுதி, தாய்லாந்து-லாவோஸ் எல்லையில் அமைந்துள்ளது.

ஆந்த்ராக்ஸ், பண்ணை விலங்குகளுக்கு ஏற்படக்கூடிய தொற்றுநோய் என்று தாய்லாந்தின் நோய்க் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்தது. பாதிக்கப்பட்ட விலங்குகளுடன் நேரடித் தொடர்பு ஏற்படும் மனிதர்களுக்கும் இந்தக் கிருமித்தொற்று ஏற்படலாம் என்றும் அது மரணம் விளைவிக்கலாம் என்றும் அப்பிரிவு விவரித்தது.

குறிப்புச் சொற்கள்