ஜெருசலம்/கைரோ: பிணைக்கைதிகளின் பெயர் விவரங்கள் அடங்கிய பட்டியலை ஹமாஸ் வழங்கும் வரை, காஸாவில் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 19) நடப்புக்கு வரவிருந்த சண்டை நிறுத்தம் தொடங்காது என இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு கூறியுள்ளார்.
சண்டை நிறுத்தம் தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னர் நெட்டன்யாகுவின் அறிவிப்பு வெளிவந்தது. சண்டை நிறுத்தம் தொடங்கி சில மணி நேரத்துக்குள் பிணைக்கைதிகள் விடுவிக்கப்படுவர் என எதிர்பார்க்கப்பட்டது. மத்திய கிழக்கை திருப்பிப்போட்ட 15 மாதப் போரை முடிவுக்குக் கொண்டுவர இது வகை செய்யும்.
இஸ்ரேலியப் பிரதமர் அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “விடுவிக்கப்படும் பிணைக்கைதிகளின் பெயர் பட்டியல் இஸ்ரேலுக்குக் கிடைக்கும் வரை, காலை 8.30 மணிக்கு நடப்புக்கு வரவிருந்த சண்டை நிறுத்தம் தொடங்காது என இஸ்ரேலியத் தற்காப்புப் படையிடம் பிரதமர் கூறினார்,” என்றது.
இந்நிலையில், காஸா சண்டை நிறுத்த உடன்பாட்டிற்கு ஹமாஸ் அதன் கடப்பாட்டை ஞாயிற்றுக்கிழமை மறுஉறுதிப்படுத்தியது. ‘தொழில்நுட்பக் கள காரணங்களுக்காக’, முதற்கட்டமாக விடுவிக்கப்படும் பிணைக்கைதிகளின் பெயர்களை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டதாக விளக்கமளித்தது.
காஸாவின் ராஃபா முதல் எகிப்து-காஸா எல்லை வழியிலான ஃபிலடெல்ஃபி பாதை வரை இஸ்ரேல் அதன் படைகளை மீட்டுக்கொள்ளத் தொடங்கியதாக ஹமாசுக்கு ஆதரவான ஊடகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
சண்டை நிறுத்தம் நெருங்கிய வேளையில், பாலஸ்தீனப் பகுதியைச் சுற்றி நடமாடுவதையும் இஸ்ரேலியப் படைகளை அணுகுவதையும் தவிர்க்கும்படி காஸா மக்களுக்கு இஸ்ரேலிய ராணுவம் எச்சரித்தது.