தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நேப்பாள விபத்து: உயிருள்ளவர்களை மீட்கும் சாத்தியம் இல்லை

1 mins read
54efe9ff-52c3-4d69-abdf-4d6acfea222e
மீட்புக் குழு உறுப்பினர்கள் ஆற்றில் விழுந்த பயணிகள் பேருந்துகளைத் தேடிக்கொண்டிருக்கின்றனர். - படம்: ராய்ட்டர்ஸ்

காத்மாண்டு: நேப்பாளத்தில் நிலச்சரிவால் ஆற்றில் விழுந்த இரண்டு பயணிகள் பேருந்துகளில் உயிருடன் எவரையும் கண்டுபிடிக்கும் சாத்தியம் இல்லை என்று மீட்புப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அந்தப் பேருந்துகள் 65 பயணிகளை ஏற்றிச் சென்றுகொண்டிருந்தன.

பேருந்துகளையும், விபத்து நடந்த 72 மணி நேரத்திற்குப் பிறகும் காணாமல்போயிருக்கும் 55 பயணிகளையும் தேட, நூற்றுக்கணக்கான பாதுகாப்பு அதிகாரிகள் ஜூலை 15ஆம் தேதி தேடுதல் பணிகளைத் தொடங்கினர்.

காத்மாண்டுக்குக் கிட்டத்தட்ட 86 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிட்வான் மாவட்டத்தில் ஜூலை 12ஆம் தேதி விபத்து நடந்தது.

இதுவரை ஏழு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

“யாரையும் உயிருடன் கண்டுபிடிக்கும் சாத்தியம் இல்லை. சடலங்களை மீட்பதில்தான் நாம் கவனம் செலுத்துகிறோம்,” என்று மூத்த காவல்துறை அதிகாரி பேஷ் ராஜ் ரிஜால் கூறினார்.

சம்பவ இடத்தில் கூடியிருக்கும் குடும்ப உறுப்பினர்கள் தங்கள் அன்புக்குரியவர்களை உயிருடன் கண்டுபிடிக்கும் நம்பிக்கையை இழந்துவிட்டதாக அதிகாரி ஒருவர் கூறினார்.

“அவர்களின் உடல்களையாவது கண்டுபிடிக்கும்படி அவர்கள் நம்மிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்,” என்றார் அவர்.

கடந்த ஜூன் மாத நடுப்பகுதியிலிருந்து, நேப்பாளத்தில் கடும் பருவமழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகளிலும் வெள்ளத்திலும் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

குறிப்புச் சொற்கள்