இந்தோனீசியக் காட்டுத்தீக்கும் ‘ஜேகார்ப்’ நிறுவனத்திற்கும் தொடர்பில்லை: ஜோகூர் அரசாங்கம்

இந்தோனீசியக் காட்டுத்தீக்கும் ‘ஜேகார்ப்’ நிறுவனத்திற்கும் தொடர்பில்லை: ஜோகூர் அரசாங்கம்

படம்: சாவ்பாவ்

30 Oct 2026 - 11:53 am

2 mins read

ஜோகூர் பாரு: இந்தோனீசியாவில் ஏற்பட்டுள்ள தீச்சம்பவங்களுடன் ஜோகூர் கார்ப்பரேஷன் (ஜேகார்ப்) நிறுவனத்துக்கு எவ்விதத் தொடர்பும் இல்லை என்று ஜோகூர் முதல்வர் ஒன் ஹஃபிஸ் காஸி தெரிவித்துள்ளார். ஜோகூர் மாநில அரசின் முதலீட்டு நிறுவனம் அது.

தீச்சம்பவங்களுடன் அதைத் தொடர்புபடுத்தும் பொய்யான குற்றச்சாட்டுகளை ஜோகூர் அரசு மிகத் தீவிரமாகக் கருதுகிறது என்று முதல்வர் கூறினார். ‘ஜேகார்ப்’ நிறுவனம், காட்டுத்தீ விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருப்பதாகத் தவறான தோற்றத்தை உருவாக்கவோ உண்மைகளைத் திரித்துக் கூறவோ எந்த முயற்சியும் இருக்கக்கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.

தாங்களோ தங்கள் துணை நிறுவனங்களோ மலேசியாவிற்கு வெளியே எங்கும் பயிர்த்தோட்ட நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என்று அந்நிறுவனம் அதிகாரபூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளதாக வியாழக்கிழமை (அக்டோபர் 29) வெளியான தமது ஃபேஸ்புக் பதிவில் திரு ஒன் ஹஃபிஸ் குறிப்பிட்டார்.

மேலும், ‘ஜேகார்ப்’ நிறுவனத்துக்குச் சொந்தமான குலிம் மலேசியா நிறுவனம், தனது துணை நிறுவனங்கள் வழியாக 2007ஆம் ஆண்டில் இந்தோனீசியாவின் ஐந்து தோட்ட நிறுவனங்களின் பங்குகளை விற்று வெளியேறிவிட்டதாக அவர் தெரிவித்தார்.

பின்னர், 2023 ஜூலை 6ஆம் தேதி மேலும் இரு இந்தோனீசிய நிறுவனங்களின் அனைத்துப் பங்குகளையும் விற்றதை அவர் சுட்டினார். ஆகவே அந்நிறுவனங்களின் உரிமை, தற்போதைய செயல்பாடுகள் அல்லது தீச்சம்பவங்களுடன் ஜேகார்ப் நிறுவனத்தை இணைப்பது முற்றிலும் தவறானது என்று முதல்வர் விளக்கினார்.

“வெளிப்படைத்தன்மையையும் பொறுப்புடைமையையும் கோர அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால், அவை உண்மைகளின் அடிப்படையிலும் நம்பகமான சான்றுகளின் அடிப்படையிலும் அமைந்திருக்க வேண்டும்,” என்று திரு ஒன் ஹஃபிஸ் கூறினார். ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளிலிருந்து ஜோகூரின் நம்பகத்தன்மையையும் நற்பெயரையும் தொடர்ந்து பாதுகாப்போம் என்று அவர் உறுதிபடத் தெரிவித்தார்.

மலேசியத் தொடர்புடைய வணிகக் குழுமங்களின் 21 நிறுவனங்கள் 2026 ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் இந்தோனீசியத் தீச்சம்பவங்களில் சம்பந்தப்பட்டிருந்ததாக வல்ஹி என்ற இந்தோனீசியச் சுற்றுச்சூழல் அமைப்பு அக்டோபர் 26ஆம் தேதி குற்றஞ்சாட்டியிருந்தது.

கடுமையான வறட்சி காரணமாக இந்தோனீசியாவின் கலிமந்தான் வட்டாரத்தில் மூன்று மாதங்களுக்கும் மேலாகக் காட்டுத்தீ தொடர்ந்து எரிந்து வருகிறது.

குறிப்புச் சொற்கள்