தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புட்டினை சந்தித்த டிரம்ப்; ரஷ்யாவுடன் உடன்பாடு காண ஸெலன்ஸ்கிக்கு அறிவுரை

3 mins read
31b5c226-e16b-4035-b226-7f185d8cef16
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் ரஷ்ய அதிபர் புட்டினும் அலாஸ்காவின் ஆங்கரேஜ் நகரில் ஆகஸ்ட் 15ஆம் தேதி செய்தியாளர் கூட்டத்தில் கைகுலுக்கும் காட்சி. - படம்: ராய்ட்டர்ஸ்

ஆங்கரேஜ்: உக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யாவுடன் உக்ரேனிய அதிபர் ஸெலன்ஸ்கி உடன்பாடு காணவேண்டும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அவருக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

ரஷ்ய அதிபர் புட்டினை அலாஸ்காவில் சந்தித்த பின்னர் ஃபாக்ஸ் ஊடகத்தில் கருத்துரைத்த திரு டிரம்ப் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

ரஷ்யா ஒரு மிகப்பெரிய வல்லரசு என்றும் உக்ரேன் அப்படி இல்லை என்றும் திரு டிரம்ப் கூறினார். மேலும், திரு ஸெலன்ஸ்கியும் திரு புட்டினும் போர் நிறுத்தம் குறித்து விவாதிக்க சந்திப்பு ஒன்றில் கலந்துகொள்ள உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

“இனிமேல் இதை செயல்படுத்துவது ஸெலன்ஸ்கியின் பொறுப்பு. அத்துடன், இதில் ஐரோப்பிய நாடுகளும் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் எனக் கூறுவேன். அவர்களும் இதில் ஓரளவு ஈடுபட வேண்டும். ஆனால், இது அதிபர் ஸெலன்ஸ்கியின் பொறுப்பு. அத்துடன், அவர்கள் விரும்பினால், அந்த சந்திப்பில் நானும் கலந்துகொள்வேன், என்று திரு டிரம்ப் ஃபாக்ஸ் ஊடகத்திடம் விளக்கினார்.

உக்ரேன் போர் குறித்த ஒரு முடிவுக்கு தானும் திரு புட்டினும் வரவில்லை என்று ஆகஸ்ட் 15ஆம் தேதி அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறினார்.

ஆனால், மூன்று மணிநேரம் நீடித்த அந்த சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது என அலாஸ்கா மாநிலத்தின் ஆங்கரேஜ் நகரில் அவர் விளக்கினார்.

“பல அம்சங்களில் நாங்கள் இருவரும் ஒத்துப்போனோம். அதில், சிலவற்றில் மிகவும் முக்கியமான அம்சங்களும் அடங்கும். இன்னும் உடன்பாடு ஏற்படவில்லை என்றாலும் ஓரளவு முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. எனவே, முழு உடன்பாடு இதுவரை ஏற்படவில்லை,” என்று திரு புட்டின் கலந்துகொண்ட செய்தியாளர் மாநாட்டில் திரு டிரம்ப் தெரிவித்தார்.

திரு டிரம்ப், திரு புட்டின் இருவரும் செய்தியாளர்களுடன் சில நிமிடங்கள் பேசினர். ஆனால், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த சந்திப்பு குறித்து சுருக்கமாகப் பேசிய திரு புட்டின், உக்ரேன் மற்றும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகள் அமெரிக்க, ரஷ்ய பேச்சுவார்த்தையை ஆக்கபூர்வமாக அணுகும்படி கேட்டுக்கொண்டார்.

அதன் தொடர்பில் எவ்வித இடையூறும் ஏற்படுத்தாமலும் திரைமறைவில் எவ்வித தூண்டுகோல் முயற்சி, சதித் திட்டத்தில் ஈடுபடாமலும் இருப்பதை தாம் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

உக்ரேன் பற்றிக் கூறிய திரு புட்டின், ரஷ்யாவுக்கு உண்மையிலேயே போரை முடிவுக்குக் கொண்டுவர ஆர்வமாக இருக்கிறது எனக் கூறினார். ஆனால், ரஷ்யாவின் நியாயமான கவலைகள் கருத்தில்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் விளக்கினார்.

“நான் பலமுறை கூறியுள்ளேன், உக்ரேனில் நடப்பவை எல்லாம் எங்கள் நாட்டின் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள அடிப்படை அச்சுறுத்தல்கள் தொடர்பானது,” என்று திரு புட்டின் சொன்னார்.

“ஐரோப்பா, உலகம் ஆகியவற்றில் சமநிலையான பாதுகாப்பு சூழல் மீண்டும் நிலைநிறுத்தப்பட வேண்டும்,” என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பு பற்றி உக்ரேன் எந்தவிதக் கருத்தும் உடனடியாகத் தெரிவிக்கவில்லை.

எனினும், உக்ரேன் நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் ஒலெக்சி ஹோன்சரென்கோ, “ரஷ்யா கூடுதல் கால அவகாசம் பெற்றுள்ளளது. தற்போதைய நிலையில் போர் நிறுத்தம், சண்டையைக் குறைப்பது என எதுவும் இல்லை,” என்று கருத்துரைத்தார்.

இந்நிலையில், உக்ரேனிய அதிபர் ஸெலன்ஸ்கி செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 18) வாஷிங்டனுக்குப் பயணம் மேற்கொள்ள உள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப் ரஷ்ய அதிபர் புட்டினுடனான சந்திப்பு உக்ரேனில் உடனடி போர்நிறுத்தத்திற்கு வழிவிடாத நிலையில் அவர் அதிபர் டிரம்ப்புடன் கலந்துரையாடச் செல்வது கவனிக்கத்தக்கது.

அலாஸ்கா சந்திப்புக்குப் பின் திரு டிரம்ப் ஸெலன்ஸ்கியுடனும் ஐரோப்பிய, நேட்டோ பிரதிநிதிகளுடனும் நீண்ட தொலைபேசி உரையாடலில் இருந்தார் என்று கூறப்படுகிறது.

பெரிய எதிர்பார்ப்புடன் நடந்த அலாஸ்கா சந்திப்பால் எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்