கோலாலம்பூர்: தலைமறைவாக உள்ள நிதியாளரான ஜோ லோ என்றழைக்கப்படும் லோ தேக் ஜோ பொய்யான அடையாளத்தில் சீனாவில் சொகுசாக வாழ்ந்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், அதன் தொடர்பில் உறுதியான சான்றுகள் அதிகாரிகளுக்குக் கிடைக்கவில்லை என்று மலேசிய உள்துறை அமைச்சர் சைஃபுதின் இஸ்மாயில் நசுத்தியோன் தெரிவித்துள்ளார்.
போலிக் கடப்பிதழுடன் ஜோ லோ சீனாவில் சுதந்திரமாக நடமாடி வருவதாக அனைத்துலகப் புலனாய்வுச் செய்தியாளர்கள் அண்மையில் செய்திகள் வெளியிட்டிருந்தனர்.
அதுகுறித்து வியாழக்கிழமை (ஜூலை 24) செய்தியாளர்கள் கேட்டதற்கு, “அச்செய்திகள் தொடர்பில் இந்நாள்வரை நம்பகமான, உறுதிப்படுத்தத்தக்க சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை. ஜோ லோ குறித்த எல்லாத் தகவல்களையும் நாங்கள் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம். ஆயினும், மேல் நடவடிக்கை எடுக்கும் அளவிற்கும் இன்னும் உறுதியான தகவல்கள் கிடைக்கவில்லை,” என்று திரு நசுத்தியோன் விளக்கமளித்தார்.
ஊடகத் தகவல்கள் மற்றும் போதாது என்றும் அதிகாரத்துவ உறுதிச்செய்தியோ, ஜோ லோ தலைமறைவாக உள்ள நாட்டின் ஒத்துழைப்போ தேவை என்றும் அவர் சொன்னார்.
1எம்பிடி நிதி முறைகேட்டு வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் ஜோ லோவை மலேசியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தேடி வருகின்றன.
கடந்த ஆண்டுகளில் ஜோ லோ பலமுறை கண்ணில் பட்டதாகச் செய்திகள் வெளியானபோதும் அவரைக் கைதுசெய்து நாடுகடத்துவதற்கான முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன.
இருப்பினும், அவரைக் கண்டுபிடித்து கைதுசெய்வதில் மலேசியா உறுதியாக இருப்பதாகத் திரு நசுத்தியோன் கூறினார்.