கோலாலம்பூர்: அடிக்கடி சிங்கப்பூர் சென்றுவரும் மலேசியர்கள், குறைந்தபட்ச நாள்கள் மலேசியாவில் தங்கியிருக்கவேண்டும் போன்ற நிபந்தனைகளைப் பூர்த்திசெய்தால் சும்பாங்கான் துனாய் ராமா (எஸ்டிஆர்) ஆதரவுத் திட்டத்துக்குத் தகுதிபெறுவர் என்று அந்நாட்டின் துணை நிதி அமைச்சர் லியூ சின் டோங் கூறியுள்ளார்.
மலேசியர்கள் எத்தனை முறை சிங்கப்பூர் சென்றுவருகின்றனர் என்ற தகவலைக் கொண்டுதான் மலேசிய உள்நாட்டு வருவாய் வாரியம் (ஐஆர்பி) அவ்வப்போது பயணம் மேற்கொள்வோரையும் நிரந்தரமாக வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்களையும் வித்தியாசப்படுத்துகிறது என்று திரு லியூ குறிப்பிட்டார்.
வாரந்தோறும் சிங்கப்பூர் சென்றுவரும் ஒருவர், மாதத்துக்கு எட்டுமுறை அல்லது அதற்கும் அதிகமுறை சிங்கப்பூர் சென்று திரும்பினால் அவர் வெளிநாட்டில் வேலை பார்ப்பதாக வகைப்படுத்தப்படுவார் என்று அவர் விளக்கமளித்ததாக நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஊடகம் தெரிவித்தது.
“மருத்துவச் சிகிச்சை, அவசரத் தேவைகள், குறுகிய காலத்துக்கான பணிகள், குடும்ப விவகாரங்கள் போன்ற காரணங்களுக்காக ஒரு மாதத்தில் ஒன்றிலிருந்து ஏழுமுறை சென்று வருவது சாதாரணமானது, நியாயமானது.
“ஒரு மாதத்துக்கு எட்டு அல்லது அதற்கும் அதிகமுறை பயணம் மேற்கொள்வது என்பது குறிப்பிடத்தக்க அளவு நேரத்தை வெளிநாட்டில் செலவிடுவதாகப் பார்க்கப்படும்,” என்று திரு லியூ ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 25) ஃபேஸ்புக்கில் தெரிவித்தார்.
அடிக்கடி பயணம் மேற்கொள்வோர் எஸ்டிஆர் திட்ட உதவி பெறுவதிலிருந்து நிரந்தரமாகத் தடைசெய்யப்படவில்லை என்றும் அவர்களின் விண்ணப்பம் மறுக்கப்படும் சாத்தியம்தான் உள்ளது என்றும் அவர் விவரித்தார். காரணக் குறிப்பு 31க்குக்கீழ் (Reason Code 31), விண்ணப்பதாரர் அல்லது அவரின் துணைவியார் வெளிநாட்டில் வசித்து வந்தாலோ வேலை பார்த்து வந்தோலோ படித்துக்கொண்டிருந்தாலோ அவரின் விண்ணப்பம் நிராகரிக்கப்படக்கூடும்.
“உண்மையிலே தேவைப்படுவோருக்கு நியாயமான, சரியான முறையில் ஆதரவு சென்றடைவதை இந்த அண்குமுறை உறுதிசெய்கிறது,” என்றும் திரு லியூ சொன்னார்.
எஸ்டிஆர் திட்டம், குறிப்பிட்ட சில மலேசியக் குடிமக்களுக்காக அரசாங்கம் வழங்கும் நிதி ஆதரவுத் திட்டம் என்றும் திரு லியூ சுட்டினார்.
தொடர்புடைய செய்திகள்
இந்த விதிமுறையால் பாதிக்கப்படும் மலேசியர்கள் மேல்முறையீட்டு ஆவணங்களைச் சமர்ப்பிக்கலாம் என்று அவர் தெரிவித்தார். ஆண்டு முழுவதும் மேல்முறையீடு செய்யலாம்.

