அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் மூன்றாவது தவணைக் காலத்துக்கும் அதிபராகத் தொடர விரும்புகிறார் என்று கூறப்படுவதை மறுத்துள்ளார். அத்தகைய நடைமுறை அமெரிக்க அரசமைப்பில் தடை செய்யப்பட்டுள்ளது என்றும் நிபுணர்கள் கூறினர்.
“நான் எட்டு ஆண்டு கால அதிபராக இருப்பேன், இரண்டு தவணைக் கால அதிபராக இருப்பேன்,” என்று என்பிசி செய்தியாளர் சந்திப்பில் திரு டிரம்ப் குறிப்பிட்டார்.
78 வயது திரு டிரம்ப், மூன்றாவது, நான்காவது தவணைக் காலத்துக்கு அதிபராக சேவையாற்ற விரும்புகிறேன் என்று விளையாட்டுக்குச் சொல்லவில்லை என்று இதற்குமுன் கூறியிருந்தார்.
ஆனால் அதற்குப் பின் போலியான செய்திகளைக் கிண்டல் செய்வதற்காக அவ்வாறு சொன்னதாக அவர் குறிப்பிட்டார்.
2029ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இரண்டாம் தவணைக் காலம் முடிந்த பிறகும் திரு டிரம்ப் அதிபர் பதவியில் தொடரவிரும்பும் ஊகத்தைப் பரப்பும் வகையில் ‘டிரம்ப் 2028’ தொப்பிகளை, டிரம்ப் நிறுவனம் விற்பனை செய்கிறது.
அதிபர் பதவிக்கு வந்து 100 நாளானதை அடுத்து இரண்டாம் தவணைக் காலத்துக்குப் பிறகும் பதவியில் தொடரும்படி பலரும் தம்மிடம் கேட்டுக்கொண்டதாகத் திரு டிரம்ப் சொன்னார்.
அமெரிக்க அரசமைப்புச் சட்டத் திருத்தம் அதிபராக ஒருவர் இரண்டு முறைக்கு மேல் தேர்வு செய்யப்படுவதைத் தடுக்கிறது.
அரசமைப்புச் சட்டத்தை மாற்ற செனட் சபையிலும் நாடாளுமன்றத்திலும் மூன்று மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஒப்புதல் தேவை. அதோடு நான்கில் மூன்று பங்கு மாநில அரசாங்கங்களின் ஒப்புதலும் அவசியம்.

