பெட்டாலிங் ஜெயா: பறவைகள் மாண்டுபோகக் காரணமாகும் ‘நியூகாசல்’ நோய்க்கிருமிப் பரவல், மலேசியாவில் தயாரிக்கப்படும் ‘பர்ட்ஸ் நெஸ்ட்’ பொருள்களிலோ அவற்றைத் தயாரிக்கும் வளாகங்களிலோ காணப்படவில்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மலேசிய விலங்குநல மருத்துவச் சேவைத் துறை (DVS) அதிகாரிகள் இதைத் தெரிவித்தனர்.
கடந்த மார்ச் மாதம் மலேசியாவில் பறவைகளைப் பாதிக்கும் இந்தத் தொற்று கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து ‘பர்ட்ஸ் நெஸ்ட்’ பொருள்களின் ஏற்றுமதியை உடனடியாகத் தற்காலிகமாக நிறுத்தும்படி சீன அரசாங்கம் கேட்டுக்கொண்டது.
மேலும், 2024 டிசம்பர் 20ஆம் தேதிக்குப் பிறகு மலேசிய ‘பர்ட்ஸ் நெஸ்ட்’ பொருள்களின் ஏற்றுமதியை நிறுத்தும்படி சீனாவின் சுங்கத் துறை கேட்டுக்கொண்டதாக ‘டிவிஎஸ்’ டிசம்பர் 31ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
‘நியூகாசல்’ நோய்க்கிருமி மனிதர்களுக்குப் பரவினால் லேசான உடல்நலச் சிக்கலை ஏற்படுத்தும். இருப்பினும், பறவைகள் பெரும்பாலும் பேரெண்ணிக்கையில் அழிந்துபோவதுண்டு.
சீனாவின் அண்மைய நிலைப்பாட்டால், மலேசியாவின் 13 ஏற்றுமதி நிறுவனங்களைச் சேர்ந்த 1.8 மில்லியன் டன் எடையுள்ள ‘பர்ட்ஸ் நெஸ்ட்’ பொருள்கள் சீனாவிற்குக் கொண்டுசெல்ல முடியாமல் தேங்கிக்கிடப்பதாகக் கூறப்பட்டுள்ளது. அவற்றின் மொத்த மதிப்பு 7.23 மில்லியன் ரிங்கிட் (S$2.2 மில்லியன்).
தற்காலிகத் தடையை நீக்குவது தொடர்பில் செய்யவேண்டியவை குறித்து மலேசிய ‘பர்ட்ஸ் நெஸ்ட்’ பொருள்களின் தயாரிப்பாளர்கள், ஏற்றுமதியாளர்களுடன் கலந்துபேசுவதாக ‘டிவிஎஸ்’ கூறியது.

