அக்டோபர் 1ஆம் தேதி முதல் மலேசியாவுக்குள் நுழையும் வெளிநாட்டு வாகனங்களுக்கு வாகன நுழைவு அனுமதி (விஇபி) முறை கட்டாயமாக்கப்படும்.
“அதில் மாற்றம் இல்லை,” என்று மலேசியப் போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக் செவ்வாய்க்கிழமை ( ஜூன் 25) தெரிவித்ததாக மலேசியாவின் பெர்னாமா செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.
நிலம்வழி சிங்கப்பூரிலிருந்து மலேசியாவுக்குள் நுழையும் அனைத்து வெளிநாட்டு வாகனங்களும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் செல்லுபடியாகும் விஇபி-யை வைத்திருக்க வேண்டும் என்று திரு லோக் மே 28ஆம் தேதி அறிவித்தார்.
வெளிநாட்டு வாகன உரிமையாளர்கள் தங்கள் விஇபி ரேடியோ அதிர்வெண் அடையாள வில்லைகளைப் பொருத்தி, பதிவு செய்து, செயல்படுத்த வேண்டும். மலேசியாவில் வெளிநாட்டு வாகனங்களுக்கான ‘அடையாள அட்டை’யாகச் செயல்படும் விஇபி இல்லாமல், மலேசியாவுக்குள் நுழைவோருக்கு 2,000 ரிங்கிட் ($570) வரையிலான அபராதம் அல்லது சிறைத் தண்டனை விதிக்கப்படலாம். ஏற்கெனவே மலேசியா சென்று அந்தத் தேதிக்குப் பிறகு தொடர்ந்து அங்கிருப்போருக்கும் இத்தண்டனைகள் பொருந்தும்.
உட்லண்ட்ஸ் கடற்பாலம், துவாஸ் இரண்டாம் பாலம் ஆகிய இரண்டு நிலவழி எல்லைகளைக் கடக்கும் வாகனங்களுக்கு இந்த விதிமுறை பொருந்தும்.
விஇபி முறைக்கான பதிவுக் கட்டணம் 10 ரிங்கிட்டாகும் ($2.90).
2017ஆம் ஆண்டில் முதன்முதலில் அறிவிக்கப்பட்ட விஇபி முறை செயல்பாட்டில் உள்ளது. எனினும், கட்டாயச் செயலாக்கம் இன்னும் நடப்புக்கு வரவில்லை.
விஇபி செயல்முறை எளிமையாக்கப்பட்டுள்ளதாக திரு லோக் கூறினார். விண்ணப்பதாரர்களின் வீடுகளுக்கு விஇபி-ஆர்எஃப்ஐடி சின்னங்கள் அனுப்பப்படுவதற்கான தெரிவு உள்ளது. எனவே அதைப் பெற ஜோகூருக்குச் செல்ல வேண்டியதில்லை.
தொடர்புடைய செய்திகள்
வெளிநாடுகளில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் அபராதங்கள், குற்றங்கள் உள்ளிட்ட போக்குவரத்துப் பதிவுகளைக் கண்காணிக்க மலேசிய அரசாங்கம் விஇபி-ஐ பயன்படுத்த முடியும் என்று அவர் கூறினார்.
போக்குவரத்துக் குற்றங்களைப் புரிந்த வாகன ஓட்டுநர்கள் மலேசியாவை விட்டு வெளியேறுவதற்கு முன்பு விதிமீறல்களுக்கான தங்கள் அபராதத் தொகையைச் செலுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.
“மலேசியாவுக்கு அடிக்கடி வருகை தரும் சிங்கப்பூர் ஓட்டுநர்கள் மலேசியாவின் சட்டங்களையும் விதிமுறைகளையும் பின்பற்றுவார்கள் என்று நம்புகிறேன்,” என்று திரு லோக் கூறினார்.
“சிங்கப்பூர் செல்லும் மலேசிய கார்கள் அந்நாட்டுச் சட்டங்களையும் விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டியதைப் போலவே இங்கு வருவோரும் நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,” என்றார் அவர்.
விஇபி விண்ணப்பதாரர்கள் அனுமதிக்காகப் பதிவு செய்யும்போது சந்தித்த பல்வேறு சிரமங்கள் குறித்து அதன் சாலை மற்றும் போக்குவரத்துத் துறைக்கு (ஜேபிஜே) அனுப்பியுள்ள மின்னஞ்சல்களின் அதிக அளவு பற்றி போக்குவரத்து அமைச்சு அறிந்துள்ளது என்றும், அனுமதிகள் செயல்படுத்தப்பட்டு ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு நீடிக்கும் என்றும் திரு லோக் கூறினார்.
இப்பிரச்சினைகள் குறித்து ஆராயப் போவதாகவும், இவ்விவகாரம் குறித்து ஆய்வு செய்ய ஜோகூருக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
“நாங்கள் (சிக்கல்களை) சரிசெய்தவுடன், சில அறிவிப்புகளை வெளியிடுவோம், மேம்பாடுகளைப் பொறுத்தவரை,” என்று அவர் கூறினார். “நாங்கள் வசதி செய்து கொடுக்க முயற்சிப்போம். ஆனால் எந்த பின்னடைவையும் எதிர்பார்க்க வேண்டாம்,” என்றும் திரு லோக் கூறினார்.
இணையத்தில் பதிவு செய்வதில் சிரமங்களை எதிர்கொள்ளும் வாகன ஓட்டுநர்கள் aduanvep@jpj.gov.my க்கு எழுதுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். ஆனால் பலர் பதில்கள் பெறாதது குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.
வாகனமோட்டிகள் vep.jpj.gov.my என்ற இணையத்தளத்திற்குச் சென்று கணக்கு ஒன்றுக்குப் பதிவு செய்து தங்களது ஆவணங்களைச் சமர்ப்பிக்கலாம். அவர்கள் vepams.jpj.gov.my. என்ற எண்ணில் தங்கள் விண்ணப்பத்தின் நிலையைக் கண்காணிக்கலாம்.
தற்போதுள்ள விஇபி-ஆர்எஃப்ஐடி குறியீடுகள் இன்னும் செல்லுபடியாகக்கூடியவையாக இருந்தால் அவர்கள் புதிய குறியீட்டுக்குப் பதிவு செய்ய வேண்டியதில்லை.