டாக்கா: அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பொருளியல் நிபுணர் முகம்மது யூனுஸ், பங்ளாதேஷில் புதிய இடைக்கால அரசாங்கத்திற்குத் தலைமையேற்க வியாழக்கிழமை (ஆகஸ்டு 8) நாடு திரும்பினார்.
பங்ளாதேஷின் ஒரே நோபல் பரிசைப் பெற்றுத் தந்த 84 வயது பேராசிரியர் முகம்மது யூனுஸ், பாரிசில் சிகிச்சையைப் பெற்று டாக்காவுக்கு வந்துள்ளார்.
அரசாங்கத்தில் பங்கேற்கவும் தேர்தலை நடத்த பொறுப்பேற்கவும் மாணவப் போராளிகள் அவரை அழைத்துள்ளனர்.
“மிக அழகான நாடாகும் வாய்ப்புகள் இந்த நாட்டுக்கு உள்ளன,” என்று விமானநிலையத்தில் அவர் கூறினார். ராணுவ உயர் அதிகாரிகளும், மாணவர் தலைவர்களும் அவரை உற்சாகத்துடன் வரவேற்றனர்.
மாணவப் போராளிகள் நாட்டைக் காப்பாற்றியுள்ளனர். சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அவர், “எங்கள் மாணவர்கள் எங்களுக்கு எந்தப் பாதையைக் காட்டினாலும், நாங்கள் அதை முன்னெடுப்போம்,” எனக் கூறினார்.
போராட்டத்தின்போது சுடப்பட்ட ஒரு மாணவரைப் பற்றிக் குறிப்பிட்டு, அவர் தியாகத்தை மறக்க முடியாது என்றபோது உணர்ச்சிவசப்பட்ட அவருக்கு தொண்டை அடைத்தது. அழுகையைக் கட்டுப்படுத்திக் கொண்டு பேசினார். “இப்போது மீண்டும் நாம் எழ வேண்டும். நாங்கள் ஒரு குடும்பம், நாங்கள் ஒன்றாக முன்னேற வேண்டும்,” என்றார் முகம்மது யூனுஸ்.
ஆகஸ்ட் 8 ஆம் தேதி அதிபர் முகமது ஷஹாபுதீனின் அதிகாரபூர்வ இல்லத்தில் ஆலோசகர்கள் குழுவுடன் அவர் தலைமை ஆலோசகராக பதவியேற்க உள்ளார்.
பங்ளாதேஷ் மீண்டெழுந்துள்ள நிலையில், “ஒழுக்கத்தின்” அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
தொடர்புடைய செய்திகள்
“கடுமையாக வேலை செய்யுங்கள்,” என்ற அவர், புதிய வாய்ப்புகள் வந்திருப்பதாகக் கூறினார். புன்னகைபூத்த முகத்துடன் விமான நிலையிலிருந்து வெளியேறி அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அதிபர் முகமது ஷஹாபுதீன், ராணுவத் தலைவர்கள், மாணவர் தலைவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இடைக்கால அரசாங்கத்தின் தலைமை ஆலோசகராக பேராசிரியர் யூனுஸை நியமிக்கும் முடிவு எடுக்கப்பட்டது.
ராணுவம் தலைமையிலான அரசாங்கத்தை ஏற்பதில்லை என்பதில் தெளிவாக இருந்த மாணவர்கள், பேராசிரியர் யூனுஸ் தலைமை தாங்க வேண்டும் என்றனர்.
திருவாட்டி ஹசீனாவின் கடும் விமர்சகரான பேராசிரியர் யூனுஸ் ஏழைகளின் வங்கியாளர் என்று அழைக்கப்படுவர். பல ஆண்டுகால இரும்புப்பிடி ஆட்சிக்குப் பிறகு அந்நாட்டில் ஜனநாயகத்தை அவர் மீண்டும் கொண்டு வருவார் என்பது நம்பிக்கை.
தேவையுள்ளோருக்கு சிறிய கடன்களை வழங்குவதன் மூலம், வறுமையை ஒழிக்க 1983ல் கிரமீன் வங்கியை நிறுவியதற்காக 2006ஆம் ஆண்டு அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.தொழிலாளர் சட்டத்தை மீறியதாகக் ஜனவரி 1ஆம் தேதி ஹசீனா அரசாங்கம் அவருக்கு ஆறு மாதச் சிறைத் தண்டனை விதித்தது.
எனினும், பங்ளாதேஷ் உடனடியாகப் பொதுத்தேர்தலை நடத்த வாய்ப்பில்லை என்று முன்னாள் வெளியுறவுச் செயலாளர் ஷம்ஷெர் சௌத்ரி வியாழக்கிழமை (ஆகஸ்ட் 8) புளூம்பெர்க் தொலைக்காட்சியிடம் கூறினார்.
எதிர்காலத் தேர்தல்கள் நேர்மையாக நடைபெறுவதை உறுதிப்படுத்தும் வகையில், அரசமைப்புச் சீர்திருத்தங்களை மேற்கொள்வதில் பராமரிப்பு அரசாங்கம் முதலில் கவனம் செலுத்தலாம். சட்டம் ஒழுங்கை மீட்டெடுக்கவும், அரசாங்க அமைப்பில் மாற்றங்களைக் கொண்டுவரவும் இடைக்கால அரசு விழையும் என்றார் அவர்.
இடைக்கால அரசாங்கம் நீண்ட காலத்துக்குச் செயல்படக்கூடும். ஏனெனில், அதிபர் மூலம் அரசியலமைப்பு மாற்றங்களைக் கொண்டுவரவேண்டும். பின்னரே தேர்தலை நடத்த வேண்டும் என்றார் திரு சௌத்ரி.
கொந்தளிப்பான பல வாரங்களுக்குப் பின்னர் அந்நாட்டில் அரசியல் மாற்றங்கள் இடம்பெற்று வருகின்றன.
பல நாள்கள் தொடர்ந்த மாணவர் போராட்டங்களில் 300க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். போராட்டம் தீவிரமடைந்தது. பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகக் கோரப்பட்டார்.
பங்ளாதேஷை 15 ஆண்டுகள் ஆண்ட திருவாட்டி ஷேக் ஹசீனா ஆகஸ்ட் 5ஆம் தேதி இந்தியாவுக்குத் தப்பி ஓடினார்.
ஆகஸ்ட் 5 அன்று அவர் பதவி விலகிய பின்னர், ஹசீனாவின் அவாமி லீக் கட்சி, இடைக்கால அரசாங்கத்தில் இடம் பெறவில்லை. கட்சி இன்னும் கைவிடப்படவில்லை என்றும், எதிர்ப்பாளர்கள் மற்றும் இடைக்கால அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாகவும் அவரது மகன் சஜீப் வசேத் ஜாய் ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.
“எனது குடும்பம் இனி அரசியலில் ஈடுபடாது என்று நான் முன்னர் கூறினேன். ஆனால் எங்கள் கட்சித் தலைவர்களும் ஊழியர்களும் தாக்கப்படும் விதத்தைப் பார்க்கும்போது, நாங்கள் தொடர்ந்து போராடவேண்டியுள்ளது,” என்று ஆகஸ்ட் 7ஆம் தேதி அவர் கூறினார்.