போர்ட் ஹுரோன்: நார்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் இயங்கும் நோபெல் குழு தமக்கு அமைதிக்கான நோபெல் பரிசை வழங்காததைக் காரணம் காட்டி, அந்நாட்டுக்கு எதிரான தமது கடுமையான விமர்சனங்களை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அண்மையில் தீவிரப்படுத்தினார்.
நார்வேயை இழிவுபடுத்தும் வகையில் விமர்சித்த அதிபர் டிரம்ப், அங்கிருந்து வரும் குடியேறிகளை அமெரிக்கா வரவேற்காது என்றும் தெரிவித்தார்.
நவம்பர் 3ஆம் தேதி நடைபெறவுள்ள அமெரிக்க இடைக்காலத் தேர்தலுக்கு முன்னதாக, மிச்சிகனில் உள்ள போர்ட் ஹுரோன் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அதிபர் டிரம்ப் இக்கருத்துகளைத் தெரிவித்தார்.
பிரான்சில் அண்மையில் ஏற்பட்ட வன்முறைக் குழப்பத்துக்குக் குடிநுழைவே காரணம் என்று குறிப்பிட்ட அதிபர் டிரம்ப், சில நாடுகளிலிருந்து வரும் குடியேறிகளைத் தாம் வரவேற்பதாகவும் ஆனால் நார்வேயிலிருந்து வருபவர்களை ஏற்க மாட்டேன் என்றும் கூறினார்.
ஏற்கெனவே ஹைய்ட்டி, லிபியா, சோமாலியா, ஏமன் ஆகிய நாடுகளைக் குறிப்பிடப் பயன்படுத்திய அதே இழிவான சொல்லைப் பயன்படுத்தி, “உண்மையில் நார்வே ஓர் இழிவான நாடாகிவிட்டது” என்று அதிபர் டிரம்ப் சாடினார்.
அனைத்துலக நாணய நிதியத்தின் புள்ளிவிவரங்களின்படி, தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் உலகின் அதிக வருமானம் ஈட்டும் நாடுகளில் நார்வேயும் ஒன்றாகும்.
மேலும், நார்வேயின் அரசு முதலீட்டு நிதியம் 2026ஆம் ஆண்டின் முதல் பாதியில் மட்டும் 1.75 டிரில்லியன் நார்வேஜிய குரோனர் (S$240.11 பில்லியன்) என்ற வரலாறு காணாத சாதனை லாபத்தைப் பதிவு செய்துள்ளது.
