காஸா: உலகச் சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானம் கெப்ரியேசஸ் வடக்கு காஸாவின் நிலைமை குறித்து பெரும் கவலை தெரிவித்துள்ளார்.
சுகாதார கட்டமைப்புகளிலும் அதன் அருகிலும் நடக்கும் கடுமையான ராணுவ நடவடிக்கைகள் வடக்கு காஸாவை பேரழிவில் ஈட்டுச்சென்றுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
மருத்துவப் பொருள்களுக்கு தட்டுப்பாடு, உதவி தேவைப்படும் இடங்களுக்கு செல்வதில் சிக்கல் உள்ளிட்டவை நிலைமையை மேலும் மோசமாக்கும் என்று அவர் கவலை தெரிவித்துள்ளார்.
வடக்கு காஸாவில் செயல்பட்டு வரும் கடைசி மருத்துவ நிலையமான கமல் அட்வானுக்குள் இஸ்ரேலிய ராணுவத்தினர் வெள்ளிக்கிழமையன்று படையெடுத்தனர்.
அப்போது மருத்துவ ஊழியர்கள், நோயாளிகள், அகதிகள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்களை இஸ்ரேலியப் படையினர் கைது செய்தனர்.
கமல் அட்வான் மருத்துவமனையில் 600க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது.
இஸ்ரேலியப் படையினர் 45 மருத்துவ ஊழியர்களை கைது செய்துள்ளனர், தற்போது 200 நோயாளிகளுக்கு 2 மருத்துவர்கள் மட்டுமே உள்ளனர் என்று திரு டெட்ரோஸ் கூறினார்.
மேலும் அம்மருத்துவமனையில் உள்ள மருத்துவ வசதிகள், மருந்துகள் உள்ளிட்டவை இஸ்ரேலியப் படையினரால் சேதப்படுத்தப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

