சோல்: வட்டாரப் பதற்றத்தை ராணுவப் பயிற்சிகளினால் அமெரிக்கா அடிக்கடி தூண்டிவிடுவதாக வடகொரியத் தலைவர் கிம் ஜொங் உன்னின் சகோதரி கிம் யோ ஜொங் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அதற்குத் தக்க வகையில் தீவிரப் பதிலடி கொடுக்கப்போவதாக அவர் எச்சரிக்கை விடுத்தார் என அந்நாட்டு அரசாங்க ஊடகம் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 18) அறிக்கையொன்றில் தெரிவித்தது.
வடகொரியாவுடன் அரசதந்திரத் தொடர்பை மீட்டெடுத்து நல்லுறவை மேம்படுத்தத் திட்டமிடும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்பின் எண்ணங்களுக்கு இந்த அறிவிப்பு எதிர்மறையாக அமையும். ஏனெனில், அவரது கருத்துக்கு எவ்விதப் பதிலையும் நேரடியாக வடகொரியா இதுவரை வழங்கவில்லை.
“ஜனநாயகக் கொரிய மக்கள் குடியரசுக்கு (டிபிஆர்கே) எதிராக தற்போதைய நிலவரப்படி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதால், அதற்கு ஏற்றவகையில் அல்லது அதைவிடத் தீவிரமாகப் பதில் நடவடிக்கைகளை நாங்கள் நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது,” என்று திருவாட்டி கிம் யோ ஜொங் அரசாங்க ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.
ஆசிய பசிபிக் வட்டாரத்தில் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் அண்மையில் போர்ப் பயிற்சிகளை நடத்திவருகின்றன. அதனை அமெரிக்காவின் தலைமையில் வடகொரியாவுடன் நடக்கவிருக்கும் போருக்கான ஒத்திகை என்று அவர் குறிப்பிட்டார்.
எனவே, வடகொரியாவின் இறையாண்மையைத் தற்காக்க தெளிவான வகையில் அந்நாடு செயலாற்றப்போவதாக அவர் கூறினார். அணுவாயுதப் போரைத் தடுக்க வடகொரியா செல்லும் பாதையை எவ்விதக் காரணங்களுக்காகவும் மாற்றப்போவதில்லை என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார்.
“எதிரிகளுக்கு மீண்டும் நினைவூட்டுகிறேன். அவர்களது ராணுவ ஒத்திகைகளினால் வட்டார பாதுகாப்புக்கும் எங்களது நாட்டுக்கும் எங்கள் ராணுவ இறையாண்மைக்கும் அச்சுறுத்தல் ஏற்படுமானால் அனைத்து வகையிலும் நாங்கள் அதனை எதிர்கொள்வோம். நாங்கள் ஒரு அணுவாயுத நாடு எனும் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை,” என்று திருவாட்டி கிம் எச்சரிக்கை விடுத்தார்.
