சோல்: இரு கொரியாக்களுக்கு இடையிலான சாலையில் தனது எல்லைக்குள் இருக்கும் பகுதிகள் சிலவற்றை வடகொரியா தகர்த்ததாகத் தென்கொரியா கூறியுள்ளது.
நண்பகல் வாக்கில் இரு கொரியாக்களுக்கும் இடையிலான ராணுவமற்ற பகுதிக்கு வடக்கே உள்ள சாலையின் சில பகுதிகள் வெடிவைத்துத் தகர்க்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
தென்கொரிய ராணுவத் தலைவர் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 15) ஊடகங்களுக்கு அனுப்பிய செய்தியில் இதைக் குறிப்பிட்டுள்ளார்.
தென்கொரிய ராணுவம் சுற்றுக்காவலையும் தாக்குதலை எதிர்கொள்ளும் தயார்நிலையையும் அதிகப்படுத்தியுள்ளது.
வடகொரியா சாலையை வெடிவைத்துத் தகர்க்கத் தயாராகிவருவதாக திங்கட்கிழமை சோல் எச்சரித்திருந்தது.
தென்கொரியா பியோங்யாங்கிற்குள் ஆளில்லா வானூர்திகளை அனுப்பியதாக வடகொரியா சாடியதை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையே கருத்து மோதல்கள் அதிகரிக்கும் நிலையில் கொரியத் தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்துவருகிறது.
ஆளில்லா வானூர்திகள் தனது தலைநகர் பியோங்யாங்கில் வடகொரிய எதிர்ப்புப் பிரசுரங்களை வீசியதாகக் கடந்த வெள்ளிக்கிழமை வடகொரியா கூறியது. அரசியல் ரீதியாகவும் ராணுவ ரீதியாகவும் இதைச் சினமூட்டும் நடவடிக்கையாகக் கருதுவதாகக் கூறிய வடகொரியா ஆயுதப் போருக்கு இது வித்திடக்கூடும் என்று எச்சரித்தது.
தென்கொரிய ராணுவத்தினரோ பொதுமக்களோ அந்த ஆளில்லா வானூர்திகளை இயக்கினரா என்ற கேள்விக்குத் தென்கொரியத் தரப்பு பதிலளிக்க மறுத்துவிட்டது.

