எல்லையில் 1 மில்லியன் கண்ணிவெடிகளைப் புதைத்துள்ள வடகொரியா

எல்லையில் 1 மில்லியன் கண்ணிவெடிகளைப் புதைத்துள்ள வடகொரியா

படம்: ஏஎஃப்பி

23 Oct 2026 - 6:42 pm

2 mins read

சோல்: தென்கொரியாவுக்கும் தனக்கும் இடையில் உள்ள ராணுவமற்ற பகுதியில் ஏறக்குறைய 1 மில்லியன் கண்ணிவெடிகளை வடகொரியா புதைத்து வைத்துள்ளது.

எல்லைப் பகுதியை வலுப்படுத்தும் நோக்கில் அவ்வாறு வடகொரியா செய்ததாகக் கூறப்படுகிறது.

2024ஆம் ஆண்டுமுதல் வடகொரியா கண்ணிவெடிகளைப் புதைத்துள்ளதாக தென்கொரிய ராணுவத் தரவுகள் தெரிவிக்கின்றன.

வடகொரியாவின் செயல் குறித்து தென்கொரிய ராணுவம் நாடாளுமன்றத்திலும் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

ராணுவமற்ற பகுதியில், தென்கொரியப் படைகள் புதைத்தது உள்பட 2 மில்லியன் கண்ணிவெடிகள் இருப்பதாக நிபுணர்கள் மதிப்பிட்டிருந்தனர்.

இம்மாதம் 7ஆம் தேதி நடந்த தணிக்கையின்போது, தென்கொரிய அமைச்சர் சங் டோங்-யங் என்பவரும் 2 மில்லியன் கண்ணிவெடிகள் இருப்பதைக் குறிப்பிட்டார்.

2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இரண்டு கொரியாக்களுக்கும் இடையிலான உறவுகளை ‘பகை’ என்று வடகொரியா வரையறுத்தது. அதன்பின்னர் எல்லையை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை அது தீவிரப்படுத்தியது.

கண்ணிவெடிகளைப் புதைப்பதுடன், எல்லையில் உள்ள தாவரங்களை அழிப்பது, தடுப்புகளை அமைப்பது, ராணுவச் சாலைகளை அமைப்பது, முள்வேலிகளை அமைப்பது போன்ற பணிகளிலும் வடகொரியப் படைகள் ஈடுபட்டுள்ளன.

இரண்டு கொரிய நாடுகளையும் இணைக்கும் கியோங்குய், டோங்ஹே பாதைகள் உள்ளிட்ட சாலைகள், ரயில் இணைப்புகள் ஆகியவற்றையும் வடகொரியா துண்டித்துள்ளது.

செப்டம்பர் 21ஆம் தேதியன்று ராணுவ எல்லைக்கோடு அருகே வடகொரியாவின் கண்ணிவெடி வெடித்ததில் தென்கொரிய ராணுவ வீரர் ஒருவர் படுகாயமடைந்தார்.

எல்லையை வலுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ள வடகொரியப் படைகள் ராணுவ எல்லைக்கோட்டைத் தாண்டியதால், தென்கொரியப் படைகள் எச்சரிக்கை விடுத்துத் துப்பாக்கிச் சூடு நடத்தின. இதன் மூலம் ராணுவப் பதற்றமும் அதிகரித்துள்ளது.

அந்தத் துப்பாக்கிச் சூடு தங்கள் படைகளுக்கு அச்சுறுத்தலாக அமைவதாக வடகொரியா கண்டனம் தெரிவித்துள்ளது.

வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னின் சகோதரியான கிம் யோ ஜோங், தென்கொரியாவின் செயலை அக்டோபர் 22ஆம் தேதி கண்டித்தார்.

குறிப்புச் சொற்கள்
தென்கொரியாவடகொரியாஎல்லை