சோல்/தோக்கியோ: கொரிய தீபகற்பத்தின் கிழக்குக் கடல் பகுதியில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வடகொரியா பாய்ச்சியதாக ஜப்பானிய தற்காப்பு அமைச்சு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
அந்த ஏவுகணையின் முழுவிவரங்கள் அறியப்படவில்லை எனவும் ஜப்பானின் சிறப்பு பொருளியல் மண்டலத்தின் வெளியில் அது இறுதியாக விழும் விதமாக அனுப்பிவிடப்பட்டது என்றும் அந்நாட்டு என்ஹெச்கே ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
அதற்கு ஒருநாள் முன்னதாக ஐக்கிய நாட்டு அமைப்பின் அணுவாயுத கண்காணிப்பு அமைப்பு வடகொரியாவின் அணுவாயுதத் திட்டத்தை எதிர்த்து வெளியிட்ட தீர்மானத்தை அதன் அரசு ஊடகத்தில் வெளியிட்ட அறிக்கையில் அந்நாடு நிராகரித்தது.
தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் ஆகஸ்ட் 10 முதல் செப்டம்பர் 10ஆம் தேதி வரையில் குவாம் தீவின் வட்டாரத்தில் அமெரிக்காவின் தலைமையில் நடத்திய கடற்படைகளின் போர் பயிற்சிகளை வடகொரியா கடந்த வாரம் வன்மையாகக் கண்டித்திருந்தது.
வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னின் தங்கை கிம் யோ ஜோங், மோசமான அரசியல் சூழலில் உள்ள கொரிய தீபகற்பத்தில் அமெரிக்கா தலைமையேற்ற போர்ப் பயிற்சிகள் பதற்றத்தைத் தூண்டிவிட்டதாக வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 18) குற்றஞ்சாட்டினார். அவரது நாட்டின் அணுவாயுதக் கொள்கையை எக்காரணத்துக்கும் கைவிடப்போவதில்லை எனவும் உறுதிப்படுத்தினார்.
