சோல்: அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் நிலவும் வேளையில், அணுவாயுதக் களைவை வடகொரியத் தலைநகர் பியோங்யாங் தொடர்ந்து நிராகரித்து வருகிறது.
இந்தச் சூழலில், வடகொரியாவின் முழுமையான அணுவாயுத ஒழிப்பை வலியுறுத்துவதில் தாங்கள் உறுதியாக இருப்பதாக அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் சனிக்கிழமையன்று (அக்டோபர் 31) மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்தன.
அடுத்த மாதம் சீனாவில் நடைபெறவுள்ள ஆசிய பசிபிக் பொருளியல் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சநிலை மாநாட்டில், அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் இடையே சந்திப்பு நிகழ்வதற்கான வாய்ப்புகள் குறித்து பல்வேறு ஊகங்கள் எழுந்து வருகின்றன.
அணுசக்திப் பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதற்காக அதிபர் டிரம்ப் தொடர்ந்து வடகொரியாவை அணுகி வருகிறார். அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில் உள்ள அட்லாண்டா நகரில் நடைபெற்ற ‘ஜி20’ கூட்டத்தின் இடையே, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ரூபியோ, தென்கொரிய வெளியுறவு அமைச்சர் சோ ஹியுன், ஜப்பானிய வெளியுறவு அமைச்சர் தோஷிமிட்சு மொதேகி ஆகியோர் வெள்ளிக்கிழமையன்று ஆலோசனை நடத்தினர்.
அப்போது, வடகொரியாவின் முழுமையான அணுவாயுதக் களைவை முன்னெடுப்பதில் தங்களது அசைக்க முடியாத நிலைப்பாட்டை அவர்கள் மீண்டும் வலியுறுத்தியதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.
வடகொரியாவின் அணுவாயுதங்கள், எறிவிசை ஏவுகணைத் திட்டங்களுக்கு வருவாய் ஈட்டுவதைத் தடுக்கும் தடை உட்பட, ஐநா பாதுகாப்பு மன்றத்தின் அனைத்துத் தீர்மானங்களையும் முழுமையாக அமல்படுத்துவதாகவும் மூன்று நாடுகளும் உறுதியளித்துள்ளன. நீண்டகாலமாக ஐநாவின் தடைகள் அமலில் இருந்தபோதிலும், ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளின் ஆதரவைப் பெற்றுள்ள வடகொரியா, தன்னை ஓர் அணுவாயுத நாடாக அறிவித்துள்ளது.
தனது அணுவாயுதக் குவிப்பு நிரந்தரமானவை என்றும் மாற்றியமைக்க முடியாதவை என்றும் வடகொரியா தொடர்ந்து கூற்இ வருகிறது.
