அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்குத் தயாராகும் வடகொரியா

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்குத் தயாராகும் வடகொரியா

2 mins read
மத்தியக் கிழக்குப் போரால் வடகொரியப் பொருளியல் பெரிதும் பாதிப்பு
446bb85e-605c-466c-a79b-f53b20b2c517
போர் தொடங்கியதிலிருந்து ஈரானுக்கு வடகொரியா இதுவரை ஆயுதங்களை அனுப்பவில்லை என்று தென்கொரிய உளவுத்துறை தெரிவித்திருக்கிறது. - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

சோல்: மத்திய கிழக்கில் போர் மூண்டதிலிருந்து வடகொரியா தனது நெடுநாள் நட்பு நாடான ஈரானிடமிருந்து விலகியிருப்பதாக தென்கொரிய அதிகாரிகள் திங்கட்கிழமை (ஏப்ரல் 6) தெரிவித்தனர்.

அமெரிக்காவுடன் புதிய உறவை ஏற்படுத்திக்கொள்ளும் வகையில் இது அமையலாம் என்று தென்கொரிய உளவுத்துறையை (என்ஐஎஸ்) மேற்கோள் காட்டி அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

அண்மைக்காலமாக வடகொரியா மத்திய கிழக்கு போர் குறித்த கருத்துகளை மிகவும் கவனமாக கையாள்வதையும் அது சுட்டிக்காட்டியுள்ளது.

இதுவரையிலும் ஈரானுக்கு எந்த ஆயுதங்களையும் வடகொரியா அனுப்பவில்லை. அத்துடன், மறைந்த ஈரானின் முன்னாள் தலைவர் அயத்துல்லா அலி காமெனிக்கு இரங்கல் செய்தியையும், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவரது மகன் மொஜ்தபா காமெனிக்கு வாழ்த்துச் செய்தியையும் வடகொரியா கூறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த விவரங்களை தென்கொரிய உளவுத் துறையின் ரகசியக் கூட்டத்தில் பங்கேற்ற பாக் சன் ஒன் என்ற அரசாங்க சட்டத்துறை அதிகாரி தெரிவித்தார்.

சீனாவும் ரஷ்யாவும் மத்திய கிழக்குப் போர் பற்றிய கருத்துகளை வெளியிட்டுவரும் நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப்பை நேரடியாகக் குறைகூறுவதை வடகொரியா தவிர்த்துவருகிறது.

மே மாதத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப், சீன அதிபர் ஸீ ஜின்பிங்கைச் சந்திக்க வாய்ப்புள்ளதால் வடகொரியா தனது அரசியல் நகர்வுகளைக் கவனமாகக் கையாண்டு வருவதாகத் தென்கொரிய உளவுத்துறை கணித்துள்ளது.

மத்திய கிழக்குப் பதற்றம் வடகொரியப் பொருளியலை பெரிதும் பாதித்துள்ளது. அதன் தொழில்துறை விநியோகம் தடைபட்டு, விலைவாசி உயர்ந்து அந்நியச் செலாவணியும் தேக்கம் அடைந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்
வடகொரியாதென்கொரியாசீனாஅமெரிக்காபோர்மத்திய கிழக்கு