சோல்: வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னும் சீன அதிபர் ஸி ஜின்பிங்கும் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த ஒப்புக்கொண்டுள்ளனர்.
அரசியல், பொருளியல், கலாசாரம் முதலியவை அவற்றுள் அடங்கும். வடகொரியத் தலைநகர் பியோங்யாங்கில் நடைபெற்ற உச்சநிலை மாநாட்டில் தலைவர்கள் இருவரும் சந்தித்தனர். அந்நாட்டின் அரசாங்க ஊடகமான ‘கேசிஎன்ஏ’ செவ்வாய்க்கிழமை (ஜூன் 9) அதனைத் தெரிவித்தது.
இருதரப்பு உறவை மேம்படுத்திப் புதிய அத்தியாயத்தை எழுதத் தலைவர்கள் இருவரும் இணங்கினர்.
‘ஒரே சீனா’ கொள்கையை முழுமையாய் ஆதரிப்பதாகத் திரு கிம் கூறினார். அனைத்துலக நிலவரம் எப்படி மாறினாலும் தைவான் நீரிணையின் இருபக்கமும் தனக்கே சொந்தம் என்று சீனா கருதுகிறது.
திரு ஸி, ஏழாண்டுகளில் முதன்முறையாக வடகொரியாவுக்குச் சென்றுள்ளார்.
உயர்நிலை அதிகாரிகளின் சந்திப்புகள் மூலம் உத்திபூர்வத் தொடர்புகளை வலுப்படுத்துவதற்குத் தலைவர்கள் இருவரும் இணக்கம் தெரிவித்தனர்.
பியோங்யாங்கில் உள்ள சீருடற்பயிற்சி அரங்கில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியைத் திரு ஸியும் தலைமகள் பெங் லியுவானும் திரு கிம்முடனும் அவரின் மனைவி லீ சால் ஜூவுடனும் கண்டுகளித்தனர்.
இருநாடுகளின் அணுக்க உறவையும் மாண்புகளையும் பறைசாற்றும் சீன, வடகொரியப் பாடல்கள் நிகழ்ச்சியில் இடம்பெற்றன.
தொடர்புடைய செய்திகள்
சீன அதிபருக்கும் அவருடன் வடகொரியா சென்ற பேராளர் குழுவுக்கும் திரு கிம் இரவு விருந்தளித்துச் சிறப்பித்தார்.
அதில் பேசிய திரு ஸி, வடகொரியத் தலைவருடன் நட்புறவு கொள்வதில் மகிழ்ச்சியடைவதாகச் சொன்னார். உற்சாக வரவேற்பு நல்கிய வடகொரிய அதிகாரிகளுக்கும் அவர் தமது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.
இருதரப்பு உறவு தொடங்கி 65 ஆண்டு நிறைவுற்றதைச் சுட்டிய சீன அதிபர், தற்போது அது புதிய வரலாற்றுத் தொடக்கத்தைத் தொட்டுள்ளதாகக் கூறினார். நட்புறவு, ஒத்துழைப்பு, உதவி முதலியவற்றில் இருதரப்பும் ஒன்றுக்கொன்று துணைநிற்பதை அவர் குறிப்பிட்டார்.
பொதுநலன்களைப் பாதுகாப்பதில் கொண்டுள்ள கடப்பாட்டிலிருந்து சீனா ஒருபோதும் பின்வாங்காது என்ற உத்தரவாதத்தைத் திரு ஸி தந்ததாகச் சீனாவின் ஸின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்தது.

