வடகொரியத் தலைவர் மிகவும் உடல் பருமனானவர்: தென்கொரிய உளவு அமைப்பு

வடகொரியத் தலைவர் மிகவும் உடல் பருமனானவர்: தென்கொரிய உளவு அமைப்பு

படம்: ராய்ட்டர்ஸ்

30 Sep 2026 - 6:25 pm

2 mins read

சோல்: வெளி உலகத் தொடர்பின்றித் தனித்திருக்கும் வடகொரியத் தலைவரின் உடல்நிலை குறித்த அதன் அண்மைய மதிப்பீட்டை மேற்கோள் காட்டி, வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் மிகவும் உடல் பருமனானவர் என்று அறியப்படுவதாக சோல் உளவு அமைப்பு புதன்கிழமை (செப்டம்பர் 30) தெரிவித்துள்ளது.

நீண்டகாலமாக உடல் பருமனாக இருக்கும் அவர், அதிக அளவில் புகைப்பிடிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டது. அவர் திடீரென மரணமடைந்தால், அணுவாயுத வசதி கொண்ட அந்நாட்டின் ஆட்சி அதிகாரம், நிலைத்தன்மை ஆகியவை குறித்து கேள்விகள் எழக்கூடும் என்பதால், கிம்மின் உடல்நிலை அனைத்துலக அளவில் அணுக்கமாகக் கவனிக்கப்பட்டு வருகிறது.

சோல் உளவு அமைப்பை மேற்கோள் காட்டிப் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் யூன் குன்-யங், கிம் மிகவும் உடல் பருமனானவர் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளார் என்றும் அவரது எடை 140 கிலோவுக்கும் அதிகம் என்றும் கூறினார்.

அவருக்கு இதய நோய் ஏற்படுவதற்கான அபாயம் அதிகம் உள்ளபோதும், படிக்கட்டுகளில் ஓடி ஏறுவது உட்பட எந்தவோர் உடற்பயிற்சி சார்ந்த செயல்பாடுகளிலும் கிம்மிற்கு எவ்விதச் சிரமமும் தென்படவில்லை என்று யூன் தெரிவித்தார்.

“அவருக்கென இருக்கும் சிறப்பு மருத்துவக் குழுவின் தீவிரக் கண்காணிப்பு காரணமாக, அவருக்கு உடனடிச் சுகாதாரப் பிரச்சினைகள் ஏதும் உள்ளதாகத் தெரியவில்லை என மதிப்பிடப்பட்டுள்ளது,” என்றார் அவர்.

2020ஆம் ஆண்டில், தனது மறைந்த தாத்தாவின் பிறந்தநாள் நினைவு விழாவில் கிம் பங்கேற்காமல், கிட்டத்தட்ட 20 நாள்கள் பொது இடத்தில் தோன்றாமல் இருந்தார். அப்போது, அவர் அறுவை சிகிச்சைக்குப் பிறகு கடுமையாக நோய்வாய்ப்பட்டுள்ளதாக வதந்திகள் பரவியதால், அவரது உடல்நிலை குறித்த சந்தேகங்கள் அதிகரித்தன.

குறிப்புச் சொற்கள்