பெய்ஜிங்: வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் சீனத் தலைநகர் பெய்ஜிங்கிற்குத் தமது மகள் கிம் ஜு ஆயுடன் பயணம் மேற்கொண்டுள்ளார்.
இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் தோல்வி அடைந்து 80 ஆண்டுகள் ஆகிவிட்டன. அதை அனுசரிக்கும் வகையில் மிகப் பெரிய ராணுவ அணிவகுப்பை சீனா நடத்தியது. அதில் கலந்துகொள்வதற்காகத் திரு கிம் அங்கு சென்றுள்ளார்.
வடகொரியாவிலிருந்து பெய்ஜிங்கிற்குத் திரு கிம் ரயிலில் சென்றார். அவரையும் அவரது மகளையும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி ரயில் நிலையத்தில் வரவேற்றார். ஜு ஆய் முதன்முதலாக 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வடகொரிய அரசாங்கத்துக்குச் சொந்தமான ஊடகத்தில் தோன்றினார்.
இம்முறை அவர் தமது தந்தையுடன் முதல்முறையாக வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
கிம் ஜோங் உன்னுக்குப் பிறகு வடகொரியாவின் அடுத்த தலைவராக ஜு ஆய் அறிவிக்கப்படக்கூடும் என்று அவரது பெய்ஜிங் பயணம் காட்டுவதாக அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர். ஜு ஆய், இவ்வாண்டு தமது தந்தையுடன் இணைந்து அரசதந்திர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.
கடந்த மே மாதம் 8ஆம் தேதியன்று வடகொரியாவில் உள்ள ரஷ்யத் தூதரகத்தில் ரஷ்யாவின் வெற்றித் தினம் கொண்டாடப்பட்டது. அதில் தமது தந்தையுடன் ஜு ஆய் கலந்துகொண்டார். ஜூன் மாதம் ரஷ்யக் கலாசார அமைச்சர் ஓல்கா லியூமிமோவாவுடன் கலைநிகழ்ச்சி ஒன்றை ஜு ஆய் கண்டு களித்தார்.