கிம் ஜோங் உன்: சவால்களை வடகொரியா முறியடிக்கும்

கிம் ஜோங் உன்: சவால்களை வடகொரியா முறியடிக்கும்

2 mins read
2bd6023f-31e1-4899-a4fa-41f79c6813b5
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு நடத்திய வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன். - படம்: ஏஎஃப்பி

பியோங்யாங்: வடகொரியாவில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

சீனாவுடனான எல்லைப் பகுதி அருகில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது.

பாதிக்கப்பட்ட இடங்களுக்கு வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் மீண்டும் நேரில் சென்று ஆய்வு நடத்தியதாக அந்நாட்டு ஊடகம் ஆகஸ்ட் 10ஆம் தேதியன்று செய்தி வெளியிட்டது.

கனமழை, வெள்ளம் காரணமாகப் பாதிக்கப்பட்டோருக்கு உதவி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளம் வடிந்ததும் அவ்விடங்களில் புதிய வீடுகள் கட்டித்தரப்படும் என்றும் பாதிக்கப்பட்ட ஏறத்தாழ 15,400 பேரை வடகொரியத் தலைநகர் பியோங்யாங்கில் தற்காலிகமாகத் தங்க வைக்க திரு கிம் திட்டமிட்டுள்ளதாகவும் அறியப்படுகிறது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் ஒன்றான உய்ஜு நகரத்துக்கு திரு கிம் நேரில் சென்றார்.

ஆகஸ்ட் 8ஆம் தேதியிலிருந்து 9ஆம் தேதி வரை அவர் அங்கு இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

வடகொரியாவின் சினுய்ஜு, உய்ஜு நகரங்களில் உள்ள ஆயிரக்கணக்கான வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததாக வடகொரிய அதிகாரிகள் கடந்த வாரம் தெரிவித்தனர்.

கனமழை காரணமாக இந்நிலை ஏற்பட்டதாக அவர்கள் கூறினர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களுக்குத் திரு கிம் கடந்த ஜூலை மாத இறுதி சென்று மீட்புப் பணிகளைப் பார்வையிட்டார்.

அரை நாளுக்குள் 4,200 பேரை மீட்க வடகொரிய ராணுவம் கிட்டத்தட்ட 10 விமானங்களைப் பயன்படுத்தியது.

இதற்கிடையே, பாதிக்கப்பட்டோரின் வாழ்க்கை வழக்கநிலைக்குத் திரும்ப இரண்டு முதல் மூன்று மாதங்கள் வரை ஆகும் என்று திரு கிம் தெரிவித்தார்.

வீடுகள் சேதமடைந்திருப்பதாகவும் பேரளவிலான பழுதுபார்ப்புப் பணிகள் தேவைப்படுவதாகவும் அவர் கூறினார்.

வடகொரியாவுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவி வழங்க முன்வந்துள்ள நாடுகளுக்கும் அனைத்துலக அமைப்புகளுக்கு அவர் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

வடகொரியாவுக்கென்றே ஒரு தனிப் பாதை உள்ளது என்று குறிப்பிட்ட திரு கிம், சொந்த வலிமை, முயற்சி ஆகியவற்றால் சவால்கள் முறியடிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்