பலவீனமான உடன்பாட்டுக்கு இணங்கப்போவதில்லை: ஸெலென்ஸ்கி

2 mins read
bae01f6c-3768-4a85-85fc-ff9784cf95ab
அமைதி உடன்பாடு கிட்டத்தட்ட தயாராகிவிட்டதாகத் திரு வொலோடிமிர் ஸெலென்ஸ்கி கூறினார். - படம்: ராய்ட்டர்ஸ்

கியவ்: உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி, பலவீனமான அமைதி உடன்பாட்டில் கையெழுத்திடப்போவதில்லை என்று தெரிவித்திருக்கிறார்.

அவ்வாறு செய்வதால் போர் நீளக்கூடும் என்றார் அவர். போரை முடிவுக்குக் கொண்டுவரவே உக்ரேன் விரும்புவதாக அவர் சொன்னார். அதற்காக என்ன விலை கொடுத்தாவது அதை எட்ட வேண்டும் என்ற நிலையில் உக்ரேன் இல்லை என்றார் திரு ஸெலென்ஸ்கி.

புதன்கிழமை (டிசம்பர் 31) நாட்டுமக்களுக்காக ஆற்றிய புத்தாண்டுச் செய்தியில் உக்ரேனிய அதிபர் அந்தக் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.

நான்காண்டுளாக நீடிக்கும் போரால் உக்ரேனியர்கள் சோர்ந்துபோயிருப்பதாக அவர் சொன்னார். இரண்டாம் உலகப் போரின்போது உக்ரேனிய நகரங்கள் பலவற்றில் ஜெர்மானியப் படைகள் ஆக்கிரமித்ததைக் காட்டிலும் அது அதிகம் என்று திரு ஸெலென்ஸ்கி கூறினார்.

“உக்ரேன் எதை விரும்புகிறது? அமைதியா? ஆமாம்? என்ன விலை கொடுத்தாவதா? இல்லை. நாங்கள் விரும்புவது போரை முடிவுக்குக் கொண்டுவரத்தானே தவிர உக்ரேனை அன்று,” என்றார் அவர்.

புத்தாண்டு பிறப்பதற்கு முன்பு திரு ஸெலென்ஸ்கி நிகழ்த்திய உரை 21 நிமிடம் நீடித்தது.

வலுவான உடன்பாட்டில் மட்டுமே நான் கையொப்பமிடுவேன். எட்டப்படும் அமைதி, ஒரு நாளுக்கோ ஒரு வாரத்திற்கோ இரண்டு மாதத்திற்கோ அன்று. மாறாக ஆண்டுக் கணக்கில் நீடிக்கும் அமைதி தேவை,” என்பதை வலியுறுத்தினார் உக்ரேனிய அதிபர்.

வாரக் கணக்கில் நடைபெறும் அமெரிக்கா தலைமையிலான அரசதந்திரப் பேச்சுகளின் காரணமாக அமைதி உடன்பாடு கிட்டத்தட்ட தயாராகிவிட்டது என்று அவர் சொன்னார்.

“அமைதி உடன்பாடு 90 விழுக்காடு தயார். எஞ்சியுள்ள 10 விழுக்காட்டில்தான் அனைத்தும் உள்ளன. அந்த 10 விழுக்காடுதான் அமைதி, உக்ரேன், ஐரோப்பா ஆகியவற்றின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும். மக்கள் எப்படி வாழப்போகிறார்கள் என்பதையும் அதுதான் முடிவுசெய்யும்,” என்று திரு ஸெலென்ஸ்கி தெரிவித்தார்.

உக்ரேனில் எந்தெந்தப் பகுதிகள் எவரெவர் கட்டுப்பாட்டுக்குள் வரும் என்ற விவகாரமே முக்கிய முட்டுக்கட்டையாய் இருப்பதாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்