வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், ஈரான் முன்மொழிந்துள்ள புதிய பரிந்துரைகளில் திருப்தியில்லை என்று கூறியுள்ளார்.
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் சண்டை நிறுத்தம் தொடர்ந்தாலும் அமைதிப் பேச்சில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
ஈரான் தனது பரிந்துரைகளை பாகிஸ்தான் வழியாக வியாழக்கிழமை மாலை (ஏப்ரல் 30 அனுப்பி வைத்தது.
“அவர்கள் பரிந்துரைக்கும் திட்டங்களில் திருப்தியில்லை,” என்று செய்தியாளர்களிடம் திரு டிரம்ப் கூறினார்.
ஈரான் தலைமைத்துவத்தில் நிலவும் பெரும் கருத்து வேறுபாடுகளே பேச்சுவார்த்தை முடங்கியதற்குக் காரணம் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
“அவர்களை நாம் முற்றிலும் அழித்துவிட வேண்டுமா அல்லது ஓர் உடன்பாட்டை செய்து கொள்ள வேண்டுமா என்றால் மனிதநேய அடிப்படையில் முதல் வாய்ப்பை தேர்ந்தெடுக்க விரும்பவில்லை,” என்றார் அவர்.
அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுக்கு எதிரான போரை பிப்ரவரி 28ஆம் தேதி தொடங்கின. ஏப்ரல் மாதம் போர் நிறுத்தப்பட்ட நிலையில் அமெரிக்காவும் ஈரானும் ஒரே ஒரு முறை நேரடி பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளன. அதில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இந்நிலையில் ஈரான் போர் விவகாரம் தொடர்பில் டிரம்ப்புக்கு உள்நாட்டில் அழுத்தம் அதிகரித்துள்து. நாடாளுமன்றத்தின் ஒப்புதலை பெறாவிட்டால் போரை கைவிட்டாக வேண்டிய நிலையில் அதிபர் டிரம்ப் உள்ளார். ஆனால் ஏற்கெனவே சண்டை நிறுத்தம் அமலில் இருப்பதால் பகைமை முடிவுக்கு வந்துவிட்டது என்கிறார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
ஹோர்முஸ் நீரிணையை ஈரான் தொடர்ந்து தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது.
இதனால் கச்சா எண்ணெய், எரிவாயு, உரம் ஏற்றப்பட்ட கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதற்குப் பதிலடியாக ஈரானின் துறைமுகங்களை அமெரிக்கா முற்றுகையிட்டுள்ளது.
போர் நிறுத்தம் நீடித்தாலும் மத்திய கிழக்கில் ஆங்காங்கு தாக்குதல்கள் தொடர்கின்றன.
சென்ற மாதம் 17ஆம் தேதி லெபனான்மீது இஸ்ரேல் பயங்கரத் தாக்குதலை நடத்தியது. இந்தத் தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டதாக லெபனான் கூறியது.

