நவம்பரில் ஹாங்காங்கில் தீச்சம்பவம்: பாதுகாப்பு நடைமுறைகள் சரியாக இடம்பெறாததாகத் தகவல்

நவம்பரில் ஹாங்காங்கில் தீச்சம்பவம்: பாதுகாப்பு நடைமுறைகள் சரியாக இடம்பெறாததாகத் தகவல்

2 mins read
4397ca59-7b4e-441e-96c9-1023ad5fee10
கடந்த நவம்பர் நிகழ்ந்த வாங் ஃபுக் கோர்ட் தீச்சம்பவம். - படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

ஹாங்காங்: சென்ற ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் தேதி ஹாங்காங்கில் உள்ள வாங் ஃபுக் கோர்ட் அடுக்குமாடி வீட்டு வளாகக் கட்டடங்கள் தீப்பிடித்ததில் 168 பேர் கொல்லப்பட்டனர்.

அன்றைய தினம் கிட்டத்தட்ட எல்லா உயிர்க் காப்பு நடைமுறைகளும் சரியாக செயல்படுத்தப்படவில்லை என்று வியாழக்கிழமை (மார்ச் 19) நீதிமன்ற விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. டாய் போ வட்டாரத்தில் உள்ள வாங் ஃபுக் கோர்ட்டில் ஏற்பட்ட தீ விபத்து, 1980ஆம் ஆண்டுக்குப் பிறகு உலகளவில் குடியிருப்புப் பகுதி ஒன்றில் ஏற்பட்ட ஆக மோசமான தீச்சம்பவமாகும்.

அக்கட்டட வளாகத்தில் இருந்த எட்டு அடுக்குமாடி வீட்டுக் கட்டடங்களில் ஏழு தீப்பிடித்துக்கொண்டன. புதுப்பிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவந்த அந்த வளாகத்தில் கட்டடங்கள் மூங்கிலால் செய்யப்பட்ட சாரக்கட்டுகள், பாதுகாப்பு வலைகள், போன்றவற்றால் மூடப்பட்டிருந்தது தீ வேகமாகப் பரவியதற்குக் காரணமாக இருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது.

இச்சம்பவம், மறக்க முடியாத வடுவை ஹாங்காங்கின் நினைவுகளில் விட்டுச் சென்றுள்ளதாக முன்னணி வழக்கறிஞர் விக்டர் டோவ்ஸ், சுயேச்சை விசாரணைக் குழுவிடம் தெரிவித்தார்.

“சம்பவத்தன்று மனிதர்களின் தவறுகளால் கிட்டத்தட்ட எல்லா உயிர்க் காப்பு நடவடிக்கைகளும் இயங்காமல் போனது என்று சேகரிக்கப்பட்டுள்ள ஆதாரங்களில் தெரிகிறது,” என்று திரு டோவ்ஸ், நீதிமன்ற விசாரணையின் முதல் நாளான வியாழக்கிழமையன்று குறிப்பிட்டார்.

இந்நிகழ்வுக்குப் பல காரணங்கள் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஆவணங்களை விசாரணைக் குழு சேகரித்துள்ளது. குடியிருப்பாளர்கள், கட்டட ஊழியர்கள், தீயணைப்பாளர்கள் ஆகியோரிடமிருந்து பெறப்பட்ட எழுத்து, காணொளி வடிவ வாக்குமூலங்களும் அவற்றில் அடங்கும் என்று நீதிமன்ற விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

தீச்சம்பவம் நிகழ்ந்தபோது வாங் ஃபுக் கோர்ட்டில் 4,600க்கும் அதிகமான குடியிருப்பாளர்கள் வசித்து வந்தனர். அவர்களில் 1,700க்கும் அதிகமானோர் 60 வயது அல்லது அதையும் தாண்டியவர்கள் என திரு டோவ்ஸ் கூறினார்.

சம்பவம் பதிவான காணொளிகள் ஒன்றில் ‘தீக்கான அபாய ஒலி இல்லை’ என்று ஒருவர் அலறியது பதிவாகியிருந்தது.

நீதிமன்ற விசாரணை பொதுமக்களுக்கு நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. ஹாங்காங்கில் உள்ள நூலகம் ஒன்றின் விரிவுரை மண்டபத்தில் நீதிமன்ற விசாரணையை நேரலையாகக் காண்பிக்க விசாரணைக் குழு ஏற்பாடு செய்திருந்தது.

100க்கும் மேற்பட்டோர் அந்த நேரலையைப் பார்த்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்