கின்சாஷா: காங்கோ ஜனநாயகக் குடியரசில் இதுவரை 4,000க்கும் மேற்பட்ட இபோலா நோயாளிகள் உறுதிசெய்யப்பட்டுள்ளனர்.
இபோலா தொற்று தொடங்கியதிலிருந்து முதன்முறையாக அந்த அளவுக்கு நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக அரசாங்கத் தரவுகள் காட்டுகின்றன.
இதுவரையில் உள்ள பதிவுகளின்படி, ஆக அதிக அளவில் விரைவாகப் பரவும் நோய்களில் இரண்டாம் நிலையில் இபோலா உள்ளது எனக் கருதப்படுகிறது.
இவ்வாண்டு மே மாதம் 15 தேதிமுதல் இபோலா ஒரு பெருந்தொற்று நோயாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும் தொற்று அதற்கு முன்னரே பரவிவிட்டது எனவும் உண்மையான நோய் தொற்றின் எண்ணிக்கை அறிவிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக இருக்கும் என்று அதிகாரிகள் அச்சம் தெரிவித்தனர்.
மத்திய ஆப்பிரிக்காவின் அங்கமான காங்கோவின் பொதுச் சுகாதாரக் கழகம் தொற்றின் மொத்த எண்ணிக்கை 1,850 மரணங்கள் உட்பட 4,053 என்ற அளவை எட்டியுள்ளது என்று கூறியுள்ளது.
நாட்டின் ஐந்து மாநிலங்களான இத்துரி, நார்த் கிவு, சவுத் கிவு, ஹவுட் உயிலே, ட்ஷ்ஹொப்போ ஆகியவற்றில் அதிக அளவில் தொற்றுகள் பதிவாகின.
இவ்வாண்டு ஜனவரி மத்தியிலேயே இத்துரி மாநிலத்தில் தொற்று பரவத் தொடங்கிவிட்டதாக அண்மையில் வெளிவந்த அறிவியல் சஞ்சிகையின் அறிக்கை குறிப்பிட்டது.
ஜனவரி முதல் மே மாதம் நடுப்பகுதி வரையில் ஏறத்தாழ 500 நேயாளிகள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு இபோலா தொற்று பரவியிருந்ததாக ஆராய்ச்சியாளர்களால் சந்தேகிக்கப்பட்டது.


