ஜோகூர் பாரு: மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
அம்மாநிலத்தில் தற்போது கிட்டத்தட்ட 4,000 பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் ஜோகூர் மாநிலமெங்கும் உள்ள பல துயர்துடைப்பு முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
திங்கட்கிழமை (ஜனவரி 13) காலை 9 மணி நிலவரப்படி ஜோகூரில் வெள்ளம் காரணமாக 3,973 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜோகூர் பேரிடர் நிர்வாகக் குழு தெரிவித்தது.
அதற்கு ஒரு நாள் முன்பு, மாலை 6 மணி நிலவரப்படி இந்த எண்ணிக்கை 3,778ஆக இருந்தது.
ஜோகூரின் ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த 1,113 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
கூடுதலாக மேலும் ஒரு துயர்துடைப்பு முகாம் திறக்கப்பட்டுள்ளதாக ஜோகூர் அதிகாரிகள் கூறினர்.
இதன்மூலம் ஜோகூரில் தற்போது மொத்தம் 38 துயர்துடைப்பு முகாம்கள் உள்ளன.
தொடர்புடைய செய்திகள்
அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ள இடம் கோத்தா திங்கி.
அங்கு 1,313 பேர் துயர்துடைப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அதைத் தொடர்ந்து ஜோகூர் பாரு, கூலாய், பொந்தியான், குளுவாங் ஆகிய இடங்களில் வெள்ள நிலவரம் மோசமாக உள்ளது.
ஜோகூரின் பத்து மாவட்டங்களிலும் மழை பெய்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.