தோக்கியோ: ஜப்பானில் வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவாகப் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளதாக அரசாங்கம் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 29) வெளியிட்ட தரவுகள் காட்டுகின்றன.
அந்நாட்டில் மனிதவளப் பற்றாக்குறையைப் போக்கும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சிறப்புத் திட்டத்தின்கீழ் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வேலைகள் வழங்கப்படுகின்றன.
ஜப்பானிய குடிநுழைவுச் சேவை முகமை வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, கடந்த ஜூன் மாத நிலவரப்படி ‘குறிப்பிட்ட திறன்பெற்ற ஊழியர்’ திட்டத்தின்கீழ் 444,256 வெளிநாட்டினர் ஜப்பானில் வசித்து வருகின்றனர். இது கடந்த டிசம்பர் மாத இறுதியுடன் ஒப்பிடுகையில் 13.8 விழுக்காடு அதிகரிப்பாகும்.
கட்டுமானம், விவசாயம் உள்ளிட்ட குறிப்பிட்ட துறைகளில் நிலவும் கடுமையான ஊழியர் பற்றாக்குறையைப் போக்க 2019ஆம் ஆண்டில் அத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அத்திட்டத்தின்கீழ் பணியாற்றுபவர்களில் அதிக எண்ணிக்கையிலானோர் வியட்னாமைச் சேர்ந்தவர்கள். அடுத்தடுத்த இடங்களில் இந்தோனீசியா, மியன்மார், பிலிப்பீன்ஸ், சீனா ஆகிய நாடுகள் உள்ளன.
வெளிநாட்டினரின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து நாட்டில் சில பிரிவினரிடம் எழுந்துள்ள கவலைகளுக்குப் பதிலளிக்கும் வகையில் பிரதமர் சனாயே தக்காய்ச்சி தலைமையிலான நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
வெளிநாட்டினர், குடிநுழைவு தொடர்பான கொள்கைகளில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. நிரந்தரக் குடியுரிமைக்கு விண்ணப்பிப்பதற்கான கட்டண உயர்வும் இதில் அடங்கும்.
பிற முக்கிய பொருளியல் நாடுகளுடன் ஒப்பிட ஜப்பானில் வெளிநாட்டினரின் விகிதம் குறைவாகவே உள்ளபோதிலும், அண்மைய ஆண்டுகளில் அங்கு வெளிநாட்டினரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
வேலைவாய்ப்புத் திட்டங்களின் கீழ் அந்நாட்டுக்குச் செல்வோர், மாணவர்கள், நிரந்தரவாசிகளையும் சேர்த்து ஜப்பானில் வசிக்கும் வெளிநாட்டினரின் மொத்த எண்ணிக்கை 2025ஆம் ஆண்டின் இறுதியில் முதன்முறையாக 4 மில்லியனைக் கடந்தது. முந்திய ஆண்டைவிட இது 9.5 விழுக்காடு அதிகம்.
