அமெரிக்காவில் உள்ள பத்தில் எட்டுப் பெரியவர்கள் குறைந்தது ஓர் ஊட்டச்சத்து மாத்திரையை உட்கொள்வதாகப் புதிய ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
மூவரில் குறைந்தது ஒருவர் புரதச்சத்து மாவுப் பொருள்கள், உணவுப் பொருள்கள், பானங்கள் ஆகியவற்றை உட்கொள்கின்றனர்.
பியூ ஆராய்ச்சி நிலையம் மேற்கொண்ட ஆய்வு சிறிதாக இருந்தாலும் அமெரிக்கர்கள் பலர் நீண்டகாலமாக உட்கொண்டுவரும் ஊட்டச்சத்து மாத்திரைகள் மிகவும் பிரபலமாவதைச் சுட்டியது.
இருப்பினும், ஆரோக்கியத்தை அவை மேம்படுத்துவதற்கான சாத்தியம் குறைவு என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்தனர்.
“தனிநபர் உட்கொள்ளும் 80 அல்லது 90 விழுக்காட்டு ஊட்டச்சத்து மாத்திரைகள் அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில்லை,” என்றார் ஹார்வர்ட் மருத்துவப் பள்ளியில் மருத்துவ இணைப் பேராசிரியர் பீட்டர் கோஹென்.
அமெரிக்காவில் ஆய்வில் ஈடுபடுத்தப்பட்ட 3,554 பெரியவர்களில் கிட்டத்தட்ட 31 விழுக்காட்டினர் புரதச்சத்துப் பொருள்களை உட்கொள்வதாகத் தெரிவித்தனர். குறிப்பாக, 50 வயதுக்கு மேற்பட்டோரிடையே அந்தப் போக்கு அதிகமாகக் காணப்பட்டது.
வைட்டமின், தாதுப் பொருள்கள் ஆகியவற்றை 67 விழுக்காட்டினர் உட்கொள்வதாகக் குறிப்பிட்டனர்.
ஏறக்குறைய 25 விழுக்காட்டினர் ஓமேகா-3, மீன் எண்ணெய், கூனி இறால் எண்ணெய் ஆகியவற்றை உட்கொள்வதாகவும் ஏறக்குறைய 20 விழுக்காட்டினர் ஜிங்செங், அஷ்வகந்தா, ஆயுர்வேத வேர் போன்ற மூலிகைப் பொருள்களை உட்கொள்வதாகவும் கூறினர்.
சத்துக் குறைபாடு, பிறக்கும் குழந்தையிடம் குறைபாடுகள் இருப்பதைத் தவிர்ப்பது ஆகிய காரணங்களுக்காக ஊட்டச்சத்து மாத்திரைகள் உண்பது சரி என்று ஸ்கிரிப்ஸ் ஆராய்ச்சி கழகத்தின் நிறுவனரும் இதயநோய் வல்லுநருமான திரு எரிக் தொபோல் குறிப்பிட்டார்.
ஆனால் அது சிறிய கூட்டத்திற்குத்தான் பொருந்தும் என்றார் அவர்.
இதயத்தையும் மூளையையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும் என்ற நம்பிக்கையில் பலரும் ஓமேகா-3 மாத்திரைகளை உட்கொள்கின்றனர். ஆனால், அவற்றால் பலன் கிடைக்கிறது என்பதை மருத்துவச் சோதனைகள் நிரூபிக்கவில்லை என்று டாக்டர் தொபோல் விளக்கம் அளித்தார்.
சொல்லப்போனால் பெரும்பாலோருக்கு ஊட்டச்சத்து மாத்திரைகள் தேவையில்லை என்றார் அவர்.
“பெரும்பாலோர் தங்களுக்குப் போதுமான புரதச்சத்து கிடைக்கவில்லை என்று அஞ்சுகின்றனர்,” என்ற அவர், சமூக ஊடகவியலாளர்கள் பலர் அதுகுறித்து அதிகம் விளம்பரம் செய்வதால் அத்தகைய எண்ணம் மக்களிடையே ஏற்பட்டிருக்கலாம் என்றார்.
ஆனால், உண்மையிலேயே பெரும்பாலோர் தாங்கள் உண்ணும் உணவுகளில் போதுமான புரதச்சத்தை உணவின் வழியாகவே எடுத்துகொள்கின்றனர் என்றார் டாக்டர் தொபோல்.
பியூ ஆய்வில், ஆண்களைவிட அதிகமான பெண்களே புரதச்சத்துப் பொருள்களை உட்கொள்வது தெரியவந்துள்ளது.
அந்த முடிவு கனடாவில் உள்ள மெக்மாஸ்டர் பல்கலைக்கழகத்தின் உடலியக்கவியல் பேராசிரியரான ஸ்டூவர்ட் பிலிப்ஸுக்கு வியப்பை அளித்துள்ளது.
அண்மைய காலம் வரை, ஆண்கள் கூடுதல் புரதச்சத்துகளை எடுத்துக்கொள்வதே மிகவும் வழக்கமாக இருந்தது என்று அவர் கூறினார்.
பெண்கள் மத்தியில்அந்தப் பயன்பாடு அதிகரித்திருப்பது, சமூக ஊடகங்களில் அவர்களின் புரதத் தேவைகளுக்குக் கொடுக்கப்படும் அதிகப்படியான கவனத்தைப் பிரதிபலிப்பதாக இருக்கலாம் என்றார் அவர்.
ஆண்களைவிட பெண்களுக்குப் புரதச்சத்துக் குறைபாடு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால் அதில் ஓரளவு நியாயமும் உள்ளது.
