என்விடியா ‘ஏஐ’ சில்லுக் கொள்முதல்: மலேசியா விசாரணை

என்விடியா ‘ஏஐ’ சில்லுக் கொள்முதல்: மலேசியா விசாரணை

படம்: மானுவல் ஒர்பெகோசோ/நியூயார்க் டைம்ஸ்

15 Nov 2026 - 1:17 pm

2 mins read

லூமுட்: உயர் செயல்திறன் கொண்ட செயற்கை நுண்ணறிவுச் சில்லுகளைச் சட்டவிரோதமாகக் கொள்முதல் செய்து வேறு இடங்களுக்குத் திசைதிருப்பியதாக அமெரிக்கா முன்வைத்த குற்றச்சாட்டுகளை மலேசியக் காவல்துறை விசாரித்து வருகிறது.

மலேசியா வழியாக அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் சில்லுகளில் அமெரிக்காவின் என்விடியா நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டவையும் அடங்கும் என்று சந்தேகிக்கப்படுகிறது.

2025ஆம் ஆண்டு ஏப்ரல் முதலே அந்த விசாரணை தொடர்வதாகத் தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்காவின் குற்றச்சாட்டுகள் வெளியான உடனேயே விரிவான விசாரணை தொடங்கப்பட்டதாக மலேசிய உள்துறை அமைச்சர் சைஃபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

மேலும், சட்டவிரோதச் செயலுக்கு மலேசியா, போக்குவரத்து நடுவமாகப் பயன்படுத்தப்பட்டதா உள்ளூர் பினாமி நிறுவனங்கள் இந்த விவகாரத்தில் ஈடுபட்டனவா என்பதில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

“உத்திபூர்வ வர்த்தகச் சட்டம் 2010ன்கீழ் நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம். மலேசிய மத்திய வங்கி, உள்நாட்டு வருவாய் வாரியம், மலேசியத் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம், சுங்கத்துறை, காவல்துறை உள்ளிட்ட பல ஒழுங்குமுறை அமைப்புகள் அந்த விசாரணையில் ஈடுபட்டுள்ளன.

“முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சு விசாரணைக்குத் தலைமை தாங்குகிறது. உத்திபூர்வ வர்த்தகச் சட்டத்தின்கீழ் சிறப்புப் பணிக்குழு ஒன்றை நாங்கள் ஏற்படுத்தியுள்ளோம்,” என்று திரு சைஃபுதீன் மேலும் கூறினார்.

மலேசியத் தொண்டூழியத் துறையால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘மடானி கிட்டா’ திட்டம், 2026 மடானி தத்தெடுக்கப்பட்ட கிராமம் மற்றும் மடானி தத்தெடுக்கப்பட்ட பள்ளி ஒப்படைப்பு விழா சனிக்கிழமை (நவம்பர் 14) கம்போங் சுங்கை திராமில் நடைபெற்றது.

அதனைத் தொடங்கிவைத்த பிறகு செய்தியாளர்களிடம் பேசியபோது உள்துறை அமைச்சர் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்