என்விடியா தலைமைப் பொறுப்பிலிருந்து ஜென்சன் ஹுவாங் விலகல்

என்விடியா தலைமைப் பொறுப்பிலிருந்து ஜென்சன் ஹுவாங் விலகல்

படம்: ஏஎஃப்பி

13 Nov 2026 - 11:48 am

2 mins read

சான் பிரான்சிஸ்கோ: செயற்கை நுண்ணறிவுச் சில்லுத் தயாரிப்பு நிறுவனமான என்விடியாவின் தலைமை நிர்வாக அதிகாரிப் பொறுப்பிலிருந்து ஜென்சன் ஹுவாங் விலகுகிறார்.

அந்நிறுவனத்தை இணைந்து நிறுவிய அவர், இயக்குநர் குழுவிலிருந்தும் வெளியேறுகிறார்.

இதனையடுத்து, அந்நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி கோலெட் கிரெஸ் இடைக்காலத் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்கிறார். இயக்குநர் குழுவின் தலைவராக சினாப்சிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ஹார்வி ஜோன்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

63 வயது ஜென்சன் ஹுவாங்கிற்குச் சீனாவைச் சேர்ந்த பெண் தொழிலதிபர் அலிஸ் ஹுவாங்குடனும் நிறுவனத்தின் சுகாதாரப் பராமரிப்புப் பிரிவுத் துணைத் தலைவர் கிம்பர்லி பவெலுடனும் திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவு இருந்ததாகத் தகவல்கள் வெளியாகின.

அலிஸ் ஹுவாங் பெய்ஜிங்கிற்காக உளவு பார்த்ததாக அமெரிக்க அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

இதனால் அதிகரித்த நெருக்குதலைத் தொடர்ந்து, நவம்பர் 11ஆம் தேதி கூடிய இயக்குநர் குழு ஜென்சன் ஹுவாங்கைப் பதவியிலிருந்து நீக்குவது குறித்து ஆலோசித்தது.

திரு ஹுவாங்கின் பதவி விலகலால், $5.1 டிரில்லியன் (4 டிரில்லியன் யுஎஸ்டி) என்விடியாவின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. அந்நிறுவனத்தின் பங்குகளும் 10 விழுக்காட்டிற்கும் மேல் சரிந்தன.

மேலும், ஏறக்குறைய $138.9 மில்லியன் (108 மில்லியன் யுஎஸ்டி) மதிப்புள்ள பங்குச் சலுகைகளையும் ஜென்சன் ஹுவாங் இழக்க நேரிடும். இது அவரது மொத்தச் சொத்து மதிப்பான 138.4 பில்லியன் அமெரிக்க டாலரில் 0.08 விழுக்காடு ஆகும்.

அவரது வெளியேற்றம் அமெரிக்கச் சில்லு ஏற்றுமதிக் கொள்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் எனக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, என்விடியாவின் அடுத்த தலைமை நிர்வாக அதிகாரியாக ஆப்பிள் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் டிம் குக் நியமிக்கப்பட வேண்டும் என அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.

இருப்பினும், நிறுவனத்தின் பொறியாளர் இயன் பக் அப்பதவிக்குத் தெரிவுசெய்யப்பட அதிக வாய்ப்புள்ளதாகப் பாலிமார்க்கெட் இணையத்தள வர்த்தகர்கள் கணித்துள்ளனர். அவரைத் தொடர்ந்து கோலெட் கிரெஸ், ரெனே ஹாஸ், டிம் குக் ஆகியோர் பட்டியலில் உள்ளனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்