வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், நடைபெறவுள்ள இடைக்காலத் தேர்தலில் தாமே களத்தில் நிற்பதாக நினைத்து வாக்களிக்குமாறு வாக்காளர்களிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
இதையடுத்து, அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, அதிபர் டிரம்ப்பை நேரடியாகக் குறிவைத்துத் தேர்தல் பிரசாரத்தில் இறங்கியுள்ளார். இரு பிரிவுகளாகப் பிளவுபட்டுள்ள அமெரிக்க நாடாளுமன்றத்தின் அதிகாரக் கட்டுப்பாட்டைத் தீர்மானிக்கும் இந்தத் தேர்தலுக்கு இன்னும் பத்து நாள்களே எஞ்சியுள்ள நிலையில், திரு ஒபாமா தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
குடியரசுக் கட்சியைச் சேர்ந்த அதிபர் டிரம்ப் மீது ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமத்திய அவர், ஈரான் மீதான அதிபர் டிரம்ப்பின் உத்திகளை எள்ளிநகையாடியதோடு, வெள்ளை மாளிகையில் அவர் செய்துள்ள ஆடம்பர சீரமைப்புப் பணிகளையும் கடுமையாக விமர்சித்தார்.
கிளீவ்லெண்ட், டிட்ராய்ட் ஆகிய நகரங்களில் நடைபெற்ற ஜனநாயகக் கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் கலந்துகொண்ட திரு ஒபாமா, அதிபர் டிரம்ப் தலைமையிலான அரசாங்கத்தைச் சாடினார்.
மிச்சிகனில் போட்டியிடும் அமெரிக்க செனட் சபை வேட்பாளர் அப்துல் எல் சையதுக்கு ஆதரவாகப் பேசிய திரு ஒபாமா, அதிபர் டிரம்ப் தலைமையிலான ஆட்சியின் தவறான முடிவுகள், நடவடிக்கைகள் ஆகியவற்றை ஓரளவுக்குக் கட்டுப்படுத்த நவம்பர் 3ஆம் தேதி நடைபெறும் வாக்குப்பதிவு மிகவும் முக்கியமானது என்று விவரித்தார்.
2009ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை அமெரிக்க அதிபராகப் பொறுப்பு வகித்த திரு ஒபாமா, ஜனநாயகக் கட்சியினரிடையே இன்றளவும் மிகவும் செல்வாக்குமிக்க தலைவராக விளங்குகிறார்.
மிச்சிகன் செனட் சபைத் தேர்தலில், முன்னாள் அமெரிக்கப் பிரதிநிதியான குடியரசுக் கட்சியின் மைக் ரோஜர்சை எதிர்த்து எல் சையத் கடுமையான போட்டியை எதிர்கொள்கிறார்.
