தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அக்டோபர் 30 டிரம்ப், ஸி ஜின்பிங் சந்திப்பு

2 mins read
b7db93fb-67bd-4645-8f18-e23c888ac211
2017ல் பெய்ஜிங்கில் நடந்த மாநாடு ஒன்றில் சந்தித்த டோனல்ட் டிரம்ப் (இடது), ஸி ஜின்பிங். - கோப்புப் படம்: ஏஎஃப்பி

வா‌ஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் சீன அதிபர் ஸி ஜின்பிங்கும் அடுத்த வாரம் சந்திக்கவிருப்பதாக வெள்ளை மாளிகை வியாழக்கிழமை (அக்டோபர் 23) தெரிவித்தது.

தமது அதிகாரத்துவ ஆசியப் பயணத்தின் ஓர் அங்கமாக திரு டிரம்ப், திரு ஸியைச் சந்திப்பார் என்று வெள்ளை மாளிகை குறிப்பிட்டுள்ளது.

திரு டிரம்ப், வெள்ளிக்கிழமை (அக்டோபர் 24) மலேசியா புறப்படுவார் என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கெரொலின் லெவிட் செய்தியாளர்களிடம் கூறினார். பிறகு அவர் ஜப்பானுக்கும் தென்கொரியாவுக்கும் பயணம் மேற்கொள்ளப்போவதாகவும் திருவாட்டி லெவிட் தெரிவித்தார்.

அப்போது திரு டிரம்ப், அடுத்த வியாழக்கிழமை (அக்டோபர் 30) ஏபெக் வர்த்தகத் தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொண்ட பிறகு தென்கொரியாவில் திரு ஸியைச் சந்திப்பார் என்று திருவாட்டி லெவிட் கூறினார்.

அண்மையில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே மறுபடியும் வர்த்தகப் பூசல் தலைதூக்கியது. அதனையடுத்து இருநாட்டுத் தலைவர்கள் சந்திப்பது கேள்விக்குறியாக ஆனது.

திரு டிரம்ப், திரு ஸி இருவரும் அடுத்த வாரம் தென்கொரியாவுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொள்வர் என்று அந்நாட்டின் முன்னணி தற்காப்பு ஆலோசகர் வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தினார். தென்கொரியா, அடுத்த வாரம் ஏபெக் நிகழ்ச்சிகளை ஏற்று நடத்துகிறது.

மேலும், திரு டிரம்ப், திரு ஸி இருவருடனும் தனிப்பட்ட முறையில் சந்திப்பு நடத்த தென்கொரிய அதிபர் லீ ஜே மியுங் திட்டமிட்டுள்ளதாக தென்கொரிய அதிபர் பாதுகாப்பு ஆலோசகரான வி சுங் லாக் கூறினார்.

“தென்கொரிய மற்றும் அமெரிக்கத் தலைவர்கள், அமெரிக்க மற்றும் சீனத் தலைவர்கள், தென்கொரிய மற்றும் சீனத் தலைவர்கள் ஆகியோருக்கிடையே நடக்கவிருக்கும் பல்வேறு சந்திப்புகளின் மூலம் ஒரு ‘மேடை’யாக தென்கொரியா எடுத்துக்காட்டப்படுவதுடன் வட்டார அளவில் அமைதி, செழிப்பு, நிலைத்தன்மை ஆகியவற்றுக்கான ஒப்புதல்களைப் பெறுவதிலும் முன்னேற்றம் காணப்படும்,” என்று திரு வி விவரித்தார்.

தென்கொரிய அதிபர் லீயும் அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் சந்திக்கவிருக்கின்றனர்; அதன் மூலம் தற்காப்பு, அமெரிக்க வரிவிதிப்பு ஆகியவற்றின் தொடர்பிலான பிரச்சினைகளில் முன்னேற்றம் காண தென்கொரியா நம்பிக்கை கொண்டுள்ளதாக திரு வி குறிப்பிட்டார்.

அதேவேளை, தென்கொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் ஒப்பந்தம் எட்டப்படுமா என்ற ஐயம் அவரிடம் உள்ளது.

குறிப்புச் சொற்கள்