பேங்காக்: தப்பி ஓடிய 200 குரங்குகளின் அட்டூழியத்திற்கு பயந்து மத்திய தாய்லாந்தின் காவல் துறையினர், வாரயிறுதியில் காவல் நிலையத்திற்குள் அடைபட்டுக் கிடந்தனர்.
லோப்புரியில் வசிப்பவர்கள் நீண்ட காலமாக பெருகி வரும் ஆக்ரோஷமான குரங்குகளின் எண்ணிக்கையால் பாதிக்கப்பட்டுள்ளனர். கட்டுக்கடங்காத அந்தக் குரங்குக் கும்பல்களைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் சிறப்பு அடைப்புகளை உருவாக்கியுள்ளனர்.
ஆனால் நவம்பர் 16 அன்று, கிட்டத்தட்ட 200 குரங்குகள் தடுப்புகளை உடைத்துக்கொண்டு நகரத்துக்குள் வெறித்தனமாக நுழைந்தன. அவற்றில் ஒன்று உள்ளூர் காவல் நிலையத்துக்குள் நுழைந்தது.
“உணவுக்காக கட்டடத்திற்குள் அவை நுழைவதைத் தடுக்க கதவுகள், சன்னல்கள் எல்லாவற்றையும் மூடிவைத்திருந்தோம்,” என்று நவம்பர் 18 அன்று காவல்துறை கேப்டன் சோம்சாய் சீடி ஏஎஃப்பி செய்தியிடம் தெரிவித்தார்.
காவல்துறை ஆவணங்கள் உள்ளிட்ட சொத்துக்களை அவை அழிக்கக்கூடும் என்றும் அவர் கவலைப்பட்டார்.
அவற்றைத் தடுக்க போக்குவரத்துக் காவலர்களும் பாதுகாப்பு பணியிலிருந்த அதிகாரிகளும் வரவழைக்கப்பட்டதாக லோப்புரி காவல்துறையினர் நவம்பர் 17 அன்று பேஸ்புக்கில் பதிவிட்டனர்.
நவம்பர் 18 அன்று ஏறக்குறைய ஒரு டஸன் குரங்குகள் காவல் நிலையத்தின் கூரையில் பெருமையுடன் அமர்ந்திருப்பதை உள்ளூர் ஊடகங்களில் வெளிவந்த புகைப்படங்கள் காட்டின.
சாலைகளில், காவல்துறையினரும் உள்ளூர் அதிகாரிகளும் முரட்டுக் குரங்குகளைச் சுற்றி வளைத்து, உணவைக் காட்டி குடியிருப்புப் பகுதிகளிலிருந்து அவற்றை இழுத்து வந்தனர்.