செம்பனை அறுவடை: வெளிநாட்டு ஊழியர் பணியமர்த்தல் ஒப்புதலைப் பரிசீலிக்க அன்வார் தயார்

செம்பனை அறுவடை: வெளிநாட்டு ஊழியர் பணியமர்த்தல் ஒப்புதலைப் பரிசீலிக்க அன்வார் தயார்

படம்: ஏஎஃப்பி

07 Nov 2026 - 11:56 am

2 mins read

கோலாலம்பூர்: செம்பனை அறுவடைப் பணிகளுக்கு வெளிநாட்டு ஊழியர்களைப் பணியமர்த்துவதற்கான ஒப்புதலைப் பரிசீலிக்கத் தாம் தயாராக இருப்பதாக மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

எனினும், பெருந்தோட்ட நிறுவனங்கள் இயந்திரமயமாக்கலின் வழி மனித உழைப்பைச் சார்ந்திருக்கும் நிலையைக் குறைக்க உறுதியளிக்க வேண்டும் என்று அவர் நிபந்தனை விதித்துள்ளார்.

வெள்ளிக்கிழமையன்று (நவம்பர் 7) இங்கு நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றிய பிரதமர் அன்வார், இத்துறையில் நிலவும் ஊழியர் தேவையை ஒப்புக்கொண்டார். அதேவேளையில், பெருந்தோட்ட நிறுவனங்கள் இயந்திரமயமாக்கலில் முதலீடு செய்ய வேண்டியதன் அவசியத்தை அவர் திட்டவட்டமாக வலியுறுத்தினார்.

அடுத்த ஆண்டுக்கான வெளிநாட்டு ஊழியர் ஒதுக்கீட்டு அனுமதியில் ஏற்படும் தாமதம், செம்பனை உற்பத்தியைப் பாதிக்கக்கூடும் என்று அக்கூட்டத்தில் தொழில்துறைப் பிரதிநிதி ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பிரதமர் அன்வார் பதிலளித்தார். உரமிடுதல் மற்றும் களைக் கட்டுப்பாட்டுப் பணிகளுக்கு ஏற்கெனவே இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் ஆனால் அறுவடைப் பணிகள் இன்னமும் பேரளவில் உடலுழைப்பையே சார்ந்திருப்பதாகவும் அந்தப் பிரதிநிதி சுட்டிக்காட்டினார்.

இவ்விவகாரத்தைத் தொடர்புடைய அமைச்சுடன் கலந்துபேசி, கோரிக்கையை விரிவாக ஆராயவிருப்பதாகக் குறிப்பிட்டார் பிரதமர் அன்வார்.

மேலும், பெரும் லாபம் ஈட்டும் தோட்ட நிறுவனங்கள் இயந்திரமயமாக்கலில் போதிய முதலீடுகளைச் செய்யத் தவறுவதைக் கடுமையாகச் சாடிய அவர், வெளிநாட்டு ஊழியர்களைத் தரமற்ற, மோசமான சூழலில் தங்கவைப்பது உட்பட அவர்களைச் சுரண்டுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் எச்சரித்தார்.

விவசாயத்துறையின் பரந்த சீர்திருத்தங்கள் குறித்துப் பேசிய பிரதமர், நவீனமயமாக்கல் முயற்சிகளில் சிறு விவசாயிகளையும் உள்ளடக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். மானியங்கள் மற்றும் அரசு உதவிகளை அளவுக்கு அதிகமாகச் சார்ந்திருப்பது, அவர்களை நிரந்தரமான சார்புநிலைக்கே தள்ளிவிடும் என்றும் அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்