எண்ணெய் விலை வீழ்ச்சி, தங்க விலை ஏறுமுகம்

தாக்குதலை நிறுத்துவதாக அமெரிக்கா அறிவித்ததன் எதிரொலி

எண்ணெய் விலை வீழ்ச்சி, தங்க விலை ஏறுமுகம்

2 mins read
fe09e8b4-2f97-4941-b511-90b42cec143c
கோப்புப் படம்: - ராய்ட்டர்ஸ்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் ஈரான்மீதான தாக்குதலை இருவாரங்களுக்கு நிறுத்திவைக்க ஒப்புக்கொண்டதாக அறிவித்ததை அடுத்து எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

ஹோர்முஸ் நீரிணையைக் கப்பல் போக்குவரத்துக்கு மீண்டும் திறப்பது தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்பில் முன்னேற்றம் காணப்பட்டுள்ள வேளையில் எண்ணெய் விலை குறைந்துள்ளது.

சிங்கப்பூர் நேரப்படி புதன்கிழமை (ஏப்ரல் 8) காலை 8.10 மணியளவில் பிரென்ட் கச்சா எண்ணெய்யின் விலை ஒரு பீப்பாய்க்கு 14.7 விழுக்காடு குறைந்து 93.20 அமெரிக்க டாலராக இருந்தது. அமெரிக்காவின் வெஸ்ட் டெக்சஸ் இன்டர்மீடியட் எண்ணெய் விலை 15.1 விழுக்காடு குறைந்து ஒரு பீப்பாய்க்கு 93.20 அமெரிக்க டாலராக இருந்தது.

முன்னதாக ஈரானுக்குத் திரு டிரம்ப் விதித்திருந்த காலக்கெடு முடிவடைய சில மணி நேரமே எஞ்சியிருந்த நிலையில் இரு வாரச் சண்டை நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டார்.

தமது ட்ரூத் சோஷியல் சமூக ஊடகப் பதிவில் அவர், “ஈரான்மீதான குண்டுவீச்சையும் தாக்குதலையும் இரு வாரங்கள் நிறுத்திவைக்க ஒப்புக்கொள்கிறேன்,” என்று குறிப்பிட்டிருந்தார். ஈரான் ஹோர்முஸ் நீரிணையை உடனடியாக, பாதுகாப்பான முறையில் முழுவதும் திறந்துவிட வேண்டும் என்ற அடிப்படையில் சண்டை நிறுத்தம் தொடர்பான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய நிலையில் எண்ணெய், திரவமாக்கப்பட்ட எரிவாயுப் போக்குவரத்தில் ஐந்தில் ஒரு பகுதி ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் நிலையில் அந்த நீரிணை கிட்டத்தட்ட மூடப்பட்டதால் அமெரிக்காவில் எண்ணெய் விலை ஏறத்தாழ 70 விழுக்காடு அதிகரித்தது.

இவ்வேளையில், தங்க விலை ஓர் அவுன்சுக்கு 3.1 விழுக்காடு அதிகரித்து 4,850 அமெரிக்க டாலராக இருந்தது. சிங்கப்பூர் நேரப்படி காலை 8.02 மணிக்கு ஓர் அவுன்ஸ் தங்கத்தின் விலை US$4,849.01ஆகப் பதிவானது.

வெள்ளி, பிளாட்டினம் போன்றவற்றின் விலையும் அதிகரித்ததோடு, பங்குச் சந்தையிலும் அமெரிக்க அதிபரின் அறிவிப்பை அடுத்து பங்குகளின் விலை அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

குறிப்புச் சொற்கள்