டிரம்ப் அறிவிப்பால் வீழ்ச்சி கண்டது எண்ணெய் விலை

ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று டிரம்ப் கூறியதன் எதிரொலி

டிரம்ப் அறிவிப்பால் வீழ்ச்சி கண்டது எண்ணெய் விலை

1 mins read
4de6d229-7413-4d1b-8228-235f20089241
எண்ணெய் தொடர்பான தடைகளை நீக்கத் திட்டமிடுவதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், ஃபுளோரிடாவில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஃபுளோரிடா: உலக நாடுகளில் எண்ணெய் விலை குறையத் தொடங்கியுள்ளது.

ஈரான் போர் வெகுவிரைவில் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கோடிகாட்டியதைத் தொடர்ந்து, எண்ணெய் விலைகள் குறைந்தன. அதனால், எண்ணெய் விநியோகத்திற்கு இடையூறு ஏற்படுமோ என்ற கவலையும் சற்றுத் தணிந்துள்ளது.

சிங்கப்பூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை (மார்ச் 10) காலை மணி 9.20க்கு, பிரென்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 88.75 அமெரிக்க டாலராக இருந்தது. இது 10.21 அமெரிக்க டாலர் அல்லது 10.3 விழுக்காடு சரிவு. ஒரு நாளைக்கு முன்பு, பிரென்ட் எண்ணெய் விலை ஆக அதிகமாக 29 விழுக்காடு கூடி, 119.50 அமெரிக்க டாலராக இருந்தது.

அமெரிக்க எண்ணெய்க் குறியீடான ‘யுஎஸ் வெஸ்ட் டெக்சஸ் இன்டர்மீடியெட்’ கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 85.37 அமெரிக்க டாலராக இருந்தது. இது முன்பைவிட 9.40 அமெரிக்க டாலர் அல்லது 9.9 விழுக்காடு வீழ்ச்சி. எண்ணெய் விலை, திங்கட்கிழமை அதிக மாற்றங்களைச் சந்தித்தது.

இந்நிலையில், அதிபர் டிரம்ப் எண்ணெய் தொடர்பான தடைகளை நீக்கத் திட்டமிடுவதாக ஃபுளோரிடாவில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

“எண்ணெய் விலையைக் குறைவாக வைத்திருக்க எண்ணியிருக்கிறோம். அண்மை நடவடிக்கையால் அது இயல்புக்கு மாறாக ஏற்றங்கண்டிருந்தது,” என்றார் அவர். மத்திய கிழக்குப் பூசல் இந்த வாரமே முடிவுக்கு வந்துவிடும் என்று தாம் நம்பவில்லை என்றும் அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்