ரியோடிஜெனிரோ: இயற்கை வனப்புக்கு தீங்கிழைக்கும் என்று பலர் அறைகூவல் விடுத்தும், பிரேசில் அதன் அமேசான் மழைக்காடுகளில் எண்ணெய்க் கிணறுகள் அமைக்க ஒப்புதல் வழங்கியுள்ளது.
அமேசான் ஆற்றுமுகப்பின் அருகே ‘பெட்ரொபாஸ்’ நிறுவனம் ஆழ்கிணறுகளை அமைக்க தனக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளதாக திங்கட்கிழமை (அக்டோபர் 20) தெரிவித்துள்ளது.
அடுத்த நவம்பர் மாதம் 10ஆம் தேதி முதல் 21ஆம் தேதிவரை, அமேசானின் ‘பெலம்’ நகரில் பிரேசில் தலைமையில் நடக்கவிருக்கும் ஐக்கியநாட்டு அமைப்பின் ‘காப்30’ (COP30) பருவநிலை மாநாட்டின் நோக்கங்களுக்கு இந்தச் செயல் எதிர்மறையானது என்று அந்நாட்டின் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
உலகின் மிகப் பெரிய எண்ணெய் உற்பத்தி நாடுகளில் பிரேசில் எட்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் எண்ணெய் உற்பத்தியை விரிவாக்கி அதன் நிதியைக் கொண்டு பிரேசிலின் பருவநிலை சீராக்கத்துக்கு உதவ முடியும் என்று அந்நாட்டு அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா வலியுறுத்திவருகிறார்.
ஐந்து ஆண்டுகளாக உரிமத்துக்கு போராடி பெட்ரோபாஸ் தற்போது அதைப் பெற்றுள்ளது. ‘ஃபொஸ் டி அமெசோனாஸ்’ பகுதியில் எண்ணெய்க் கிணறுகளை அந்த நிறுவனம் தோண்டப் போகிறது.
‘மிகவும் கடினமான சுற்றுச்சூழல் உரிமம் வழங்கும் செயல்முறைகளுக்குப் பிறகு’ இந்த முடிவெடுக்கப்பட்டதாக பிரேசிலின் சுற்றுச்சூழல் முகவை கூறியது.
அரசாங்கம் சாராத பருவநிலை கண்காணிப்பு அமைப்பு இதனை எதிர்த்து பொதுமக்களுடன் இணைந்து நீதிமன்றம் செல்லவிருப்பதாக அறிவித்துள்ளது. இயற்கைக்கு எதிரான புதைவடிவ எரிபொருள்களை உலக நாடுகள் தவிர்க்க வேண்டும் என்று மாநாட்டில் அதன் தலைவராக எவ்வாறு பிரேசில் கூறும் என்று அமைப்புகள் கேள்வி எழுப்பியுள்ளன.
அமேசானின் எண்ணெய் உற்பத்தி மேலும் பல அருகாமையில் உள்ள நாடுகளையும் ஊக்குவிப்பதால், இயற்கை பெரிதும் பாதிப்படையும் என்பது ஆர்வலர்களின் கவலை. ஏனெனில், கயானா போன்ற நாடுகள் அவ்வாறு உற்பத்திகளை வேகப்படுத்தி பத்தே ஆண்டுகளில் முக்கிய ஏற்றுமதியாளராக உருமாறியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
“நமது வட்டாரம் நாட்டின் ஒட்டுமொத்த இறையாண்மையைப் பிரதிபலிக்கிறது. அதன் ஆற்றலை புறக்கணிக்கும் நிலையில் பிரேசில் இருக்கமுடியாது,” என்று பிரேசிலின் எரிசக்தி அமைச்சர் அலெக்சாண்ட்ரே சில்வெய்ரா ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பிரேசிலின் 80 விழுக்காட்டு சதுப்புநிலங்கள் அமேசான் பகுதியில் அமைந்துள்ளன என்று உலக வனவிலங்கு நிதி அமைப்பு கூறியுள்ளது. எனவே அங்கு நடக்கும் இவ்வகை செயல்பாடுகள் இயற்கைசார் உயிரினங்களுக்கு பெருங்கேடு விளைவிக்கும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

