மஸ்கட்: ஹோர்முஸ் நீரிணையில் தாக்குதலுக்கு உள்ளாகித் தீப்பிடித்த பனாமா நாட்டுக் கொடியுடன் சென்றுகொண்டிருந்த ‘ரிட்டி’ எனும் வணிகக் கப்பலிலிருந்து 25 பணியாளர்களைத் தாங்கள் மீட்டதாக ஓமான் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட கப்பலிலிருந்து மீட்கப்பட்ட பணியாளர்களுக்குத் தேவையான மருத்துவச் சிகிச்சை வழங்கப்பட்டுள்ளதாக ஓமானின் கடல்சார் பாதுகாப்பு நிலையம் அக்டோபர் 30ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது.
தாக்குதலுக்கு உள்ளான அந்தக் கப்பல் கச்சா எண்ணெய் சுமந்து சென்றதாகக் கூறப்பட்டது.
அதே வேளையில், ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் போக்குவரத்திற்கு ஈரான் விதித்துள்ள கட்டுப்பாடுகளை மீறி, அனுமதிக்கப்படாத தெற்கு வழித்தடத்தைப் பயன்படுத்த முயன்ற மூன்று எண்ணெய்க் கப்பல்கள் தடுத்து நிறுத்தப்பட்டதாக அந்நாடு தெரிவித்துள்ளது.
அவற்றில், இரண்டு மில்லியன் பீப்பாய் எண்ணெயைச் சுமந்துசென்ற எண்ணெய்க் கப்பல் ஒன்று கடற்படைக் கண்ணிவெடியில் சிக்கி வெடித்ததால் தீப்பிடித்ததாக ஈரான் கூறியது.
தங்களது எச்சரிக்கைகளைப் புறக்கணித்துவிட்டு, அமெரிக்கப் படைகளின் ஆதரவுடன் அந்தக் கப்பல்கள் செல்ல முயன்றதாக அது சாடியுள்ளது.
இதற்கிடையே, ஹோர்முஸ் நீரிணையின் உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட முக்கியப் போக்குவரத்து வழித்தடங்களிலிருந்து ஈரானியக் கண்ணிவெடிகள் வெற்றிகரமாக அகற்றப்பட்டுவிட்டதாக அக்டோபர் 30ஆம் தேதி அமெரிக்க மத்தியத் தளபத்தியத்தின் தலைவர் அட்மிரல் பிராட் கூப்பர் தெரிவித்தார்.
மேலும், கடல்வழிப் பாதைகள் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்ய அமெரிக்கப் படைகள் அங்குத் தொடர்ந்து பணியாற்றி வருகின்றன என்றும் அவர் கூறினார்.
இந்நிலையில், ஈரானின் லாவன் தீவுக்குத் தெற்கே சென்ற கப்பல்மீது அடையாளம் தெரியாத பொருள் மோதியதில் தீப்பிடித்ததாகவும் பாதிக்கப்பட்ட கப்பலில் இருந்த பணியாளர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் பிரிட்டிஷ் கடல்சார் பாதுகாப்பு நிலையம் தெரிவித்தது.
