ஜகார்த்தா: இந்தோனீசிய அரசாங்க ஊழியர்கள், வாரத்திற்கு ஒரு நாள் வீட்டிலிருந்து வேலை பார்க்கும் நடைமுறையைக் கட்டாயமாகப் பின்பற்றும்படி உத்தரவிடப்பட்டுள்ளனர்.
நோன்புப் பெருநாள் விடுமுறைக் காலம் முடிந்து வேலைக்குத் திரும்பும் அரசாங்க ஊழியர்கள் வாரத்திற்கு ஒரு நாள் நிச்சயமாக வீட்டிலிருந்து வேலை செய்யவேண்டும் என்று இந்தோனீசியப் பொருளியல் ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹயர்லாங்கா ஹர்டாட்டோ தெரிவித்தார்.
உலக அளவில் அதிகரித்துள்ள எரிசக்தி விலையைச் சமாளிக்க வீட்டிலிருந்து வேலை பார்க்கும் நடைமுறையை இந்தோனீசிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
தனியார் துறையும் அதே நடைமுறையை அறிமுகம் செய்யும்படி அரசாங்கம் கேட்டுக்கொண்டது.
அரசாங்கச் சேவைகள் இடையூறின்றி செயல்படவேண்டும் என்ற திரு ஹயர்லாங்கா, மனிதவள அமைச்சும் உள்துறை அமைச்சும் புதிய நடைமுறையை அமல்படுத்தும் நடவடிக்கையைப் பார்த்துக்கொள்ளும் என்றார்.
எரிபொருள் தட்டுப்பாடு, அதிகரிக்கும் விலை ஆகியவற்றைச் சமாளிக்க புதிய நடைமுறை உதவும் என்றார் இந்தோனீசிய எரிசக்தி, கனிமவளத் துறை அமைச்சர் பஹ்லில் லஹடாலியா.
புதிய நடைமுறை மூலம் எரிசக்தி கொள்முதலில் கிட்டத்தட்ட 20 விழுக்காடு வரை மிச்சம் பிடிக்கமுடியும் என்று இந்தோனீசிய நிதியமைச்சர் பர்பயா யூதி சடெவா விவரித்தார்.
இருப்பினும், வாரத்திற்கு ஒரு நாள் வீட்டிலிருந்து வேலை செய்யும் நடைமுறை முக்கிய துறைகளுக்குப் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்று இந்தோனீசிய முதலாளிகள் சங்கம் அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
“உற்பத்தி, தளவாடம், வர்த்தகம், சேவைகள் ஆகிய துறைகளில் வேலை செய்வோர் பணியிடங்களில் இருப்பது அவசியம்,” என்று சங்கம் சுட்டியது.
தகவல் தொழில்நுட்பம், புத்தாக்கப் பொருளியல் போன்ற ஒருசில துறைகளுக்கு மட்டுமே வீட்டிலிருந்து வேலை செய்யும் நடைமுறை பொருந்தும் என்பதை ஒப்புக்கொண்ட அரசாங்கம், தேவைக்கேற்ப வெவ்வேறு நிறுவனங்களும் அந்தக் கொள்கையை மாற்றிக்கொள்ளலாம் என்றது.


